சான்பிரான்சிஸ்கோ: ஓமியம் (Ohmium) என்ற நிறுவனத்துடன் அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குவதோடு, 39,000-க்கும் மேலான தொழிற்சாலைகள், 2.6 மில்லியன் அளவிற்கு தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள், என இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது.
சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சி மையங்கள் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு, மனிதவளங்கள் மற்றும் திறன்களை முன்வைத்து வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது.
இத்தகைய சிறப்புகளை கொண்ட தமிழ்நாட்டில், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடன் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்பயணத்தின் போது, சான்பிரான்சிஸ்கோவில் 29.8.2024 அன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய
6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதனையடுத்து 30.8.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 31.8.2024 அன்று சான்பிரான்சிஸ்கோவில், ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. அதன் விவரம்:
ஓமியம் நிறுவனம், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, அளவிடக்கூடிய புரோட்டான் பரிமாற்ற சவ்வு (Proton Exchange Membrane) எலக்ட்ரோலைசர் அமைப்புகளை வடிவமைத்து, உற்பத்தி செய்கிறது. ஓமியம் நிறுவனமானது அமெரிக்கா, மெக்சிகோ, ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் உலகளாவிய பசுமை ஹைட்ரஜன் திட்டக் குழாய்களை அமைத்துள்ளது.
ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் ஓமியம் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே. விஷ்ணு, ஓமியம் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஆன் பாலன்டைன், தலைமை தொழில்நுட்ப அலுவலர் சொக்கலிங்கம் கருப்பையா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.