முதலில் அண்ணாமலையைத்தான் கைது செய்யவேண்டும் - ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

By ராஜேஷ் மகாலிங்கம்

தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கும் ஆளுநருக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் முற்றி வருகிறது. சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருப்பது, தொடங்கி சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க முட்டுக்கட்டை போட்டது வரை அந்த மோதல் நீடித்து வருகிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

நிர்வாக ரீதியாக மட்டுமல்லாது கொள்கை ரீதியாகவும் ஆளுநர் திமுகவுடன் மோதி வருகிறார். சனாதனம் தொடங்கி, பாரதம், இந்து பூமி வரை இருதரப்புக்கும் கருத்து மோதல்கள் வலுத்து வருகிறது. இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் நாகலாந்து நாய்க்கறி பேச்சு அந்த மோதலை மேலும் உக்ரமாக்கி இருக்கிறது.

‘’ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். வேண்டுமென்றே நம்மை வம்புக்கு இழுக்கிறார். நாகலாந்தில் இவருக்கு ஏற்பட்ட நிலை என்ன தெரியுமா? நாகலாந்துக்காரன் நாய் கறி சாப்பிடுவான். அவர்களே இவரை ஓட ஓட விரட்டினார்கள். அப்படியானால் உப்புப் போட்டு சாப்பிடும் தமிழர்களுக்கு எந்த அளவுக்கு சொரணை இருக்கும் என்பதை ஆளுநர் மறந்துவிடக்கூடாது’’ என்பதுதான் பாரதியின் சர்ச்சைக்குரிய அந்தப் பேச்சு.

நாகலாந்து கல்வி அமைச்சர்

ஆர்.எஸ்.பாரதியின் இந்தக் கருத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகலாந்து ஆளுநர் இல.கணேசன், நாகாலந்து கல்வி அமைச்சர் ஸ்ரீ டெம்ஜென் இம்னா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கடுமையாக ரியாக்ட் செய்தார்கள்.

ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தளத்தில், ‘நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் திரு. ஆர்.எஸ்.பாரதி ‘நாய்க் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது; ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என திரு. பாரதியை வலியுறுத்துகிறேன்’ என பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினோம். இனி அவரது பேட்டி...

ஆளுநரை விமர்சிப்பதாக கருதி, குறிப்பிட்ட இன மக்களை இழிவுப்படுத்துவது சரியா?

நான் யாரையும் இழிவுபடுத்தவில்லை. உண்மையைத் தான் கூறியுள்ளேன். நாய்க்கறி உண்பது நாகாலாந்து மக்களின் கலாசாரம் என்பதை கவுகாத்தி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உறுதி செய்துள்ளது. இதை மேற்க்கொள் காட்டியே நான் பேசினேன். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் ஆளுநர், காயப்படுத்தும் வகையில் கட்டுக்கதைகளை நாள்தோறும் கூறி வரும் ஆளுநர், பாஜவினர் மத்தியில் நான் உண்மையைத்தான் பேசியுள்ளேன்.

அப்படியானால் நீங்கள் பேசியதிலிருந்து பின்வாங்க மாட்டீர்களா?

நான் சரியான கருத்தைத்தான் பேசியுள்ளேன். அதில் எந்தத் தவறும் இல்லை. நாய்க்கறி திண்பவர்களே விரட்டினார்களே... நாங்கள் விரட்ட எவ்வளவு நேரமாகும் என்றுதானே கேட்டேன். இதில் என்ன தவறு? யாருக்காகவும் எதற்காகவும் என் கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன். நாங்கள் கலைஞர் வழி வந்தவர்கள்; எதையும் சரியாகத்தான் செய்வோம். அதனால் என்னுடைய கருத்தில் நான் உறுதியாக உள்ளேன். யாரிடமும் மன்னிப்பும் கேட்கமாட்டேன்

நாகா மக்களை புண்படுத்தும் வகையில் பேசியது தவறு என்கிறாரே தமிழக ஆளுநர்..?

தமிழக சட்டப்பேரவையில் இயற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு நேரமில்லை. ஆனால், திமுகவினர் எங்கு என்ன பேசுகிறார்கள் என்பதைக் கவனிக்க மட்டும் அவருக்கு நேரமிருக்கிறது. அதேசமயம் ஆளுநர் இந்த விவகாரத்தை அரசியலாக்கி திசைதிருப்ப முயற்சிக்கிறார். அது எடுபடாது என்பது அவருக்கே தெரியும். வட மாநிலங்களில் தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. இதை வைத்து அங்கு நாடகமாடலாம் என நினைத்தார்; அது முடியாமல் போய்விட்டது.

அண்ணாமலை

இப்படிப் பேசியதற்காக உங்களை கைது செய்ய வேண்டுமென்கிறாரே அண்ணாமலை..?

(சிரிக்கிறார்). ஒரு குற்றவாளி நிரபராதியை கைது செய்யுங்கள் எனச் சொல்வது எவ்வளவு வேடிக்கையானதோ அப்படித்தான் அண்ணாமலையின் கூற்றும் உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து ரவுடிகளையும் கட்சிக்குள் வைத்து, எங்களின் மக்கள் முதல்வர் தலைமையில் அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தை சீர்குலைக்கத் திட்டமிட்டு நாள்தோறும் பிரச்சினைகளை அரங்கேற்றி வரும் அவரைத்தான் முதலில் கைது செய்ய வேண்டும்.

உண்மையைச் சொன்னால் என்னைக் கைது செய்ய வேண்டுமென்றால் நாட்டில் உத்தமர்கள் வாழ முடியாத நிலை ஏற்படும். அண்ணாமலை என்னுடைய பேச்சை நல்லவேளையாக இந்தியில் மொழிபெயர்ப்பு செய்தார். அதனால் அந்த மக்களுக்கு உண்மை புரிந்தது. அதற்காக அண்ணாமலைக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

வானதி சீனிவாசன்

பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசுகிறார்... தற்போது குறிப்பிட்ட இன மக்களையே தவறாகப் பேசி இருக்கிறார். இப்படியெல்லாம் பேசும் பாரதிக்கு கோல்டு மெடல் கொடுக்க வேண்டும் என்கிறாரே வானதி சீனிவாசன்..?

“திமுக எம்எல்ஏ, கவுன்சிலர்கள் ஒரு வீட்டில் இருக்கமாட்டாங்க. திமுகவில் ஒரு பண்பாடு வெச்சிருக்காங்க. அவங்க காலையில் ஒரு வீட்டுல இருப்பாங்க... சாயங்காலம் ஒரு வீட்டுல இருப்பாங்க. திமுகவின் ஜீன் அது” என வானதி சீனிவாசன் பேசினாரே... அவருக்கு என்ன மெடல் கொடுப்பது? சில்வரா... மெட்டலா?

எங்களுக்கு எந்த இடத்தில் எப்படிப் பேச வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். வானதி கதையெல்லாம் கோவையில் போய் கேட்டால்தான் தெரியும். அதனால் அவரெல்லாம் எங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆளுநர் - அரசு மோதல் போக்கு இப்படியே நீடித்தால் அரசு நிர்வாகம் ஸ்தம்பிக்காதா?

ஆளுநர் தன்னுடைய தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்படுவதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் நாகலாந்து மக்கள் ஓட ஓட விரட்டியது போல தமிழக மக்களும் விரட்டுவார்கள். கையெழுத்து போடுவதுதான் ஆளுநர் வேலை. அதைத்தானே பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் செய்கிறார்கள். அந்த வேலையை இவரும் செய்துவிட்டுப் போகவேண்டியது தானே. அப்படி செய்தால் நாங்கள் ஏன் இவரை குறித்து பேசப்போகிறோம்? அரசு நிர்வாகத்தில் எந்தச் சிக்கலும் இல்லை. அதனை எங்கள் மக்களின் முதல்வர் திறம்பட நடத்தி வருகிறார்.

இதையும் வாசிக்கலாமே...

தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!

வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!

மோடியை அலற வைத்த இளம்பெண்... பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!

திருப்பதியில் இன்று தீபாவளி ஆஸ்தானம்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

தனுஷ் முதல் சமந்தா வரை... மூன்றாவது நபர் தலையீட்டால் பிரிந்த பிரபலங்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE