தனியார் பள்ளிகளின் மெட்ரிக்குலேஷன் பெயரை நீக்க அரசுக்கு உத்தரவிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

By KU BUREAU

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் பெயரில் உள்ள ‘மெட்ரிக்குலேஷன்’ என்ற வார்த்தையை நீக்கி, ‘தனியார் பள்ளி’ என பெயர் வைக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வேமன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த கோரிக்கை தொடர்பாக கடந்த 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.கணேசனும், அரசு தரப்பில் மாநில அரசு ப்ளீடர் ஏ.எட்வின் பிரபாகரும் ஆஜராகி வாதிட்டனர்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த விவகாரம் தொடர்பாக தனிப்பட்ட முறையில் கொள்கை முடிவுஎடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட முடியாது. மனுதாரரின் கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாக அதில் உள்ள நிறை,குறைகளை ஆராய்ந்து கல்வியாளர்கள்தான் முடிவு செய்ய முடியும். இதில் நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. எனவே இது தொடர்பாக மனுதாரர் அளித்துள்ள கோரிக்கை மனுவை அரசு பரிசீலிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE