கனடாவில் பயங்கரம்… விடாமல் துரத்திய மர்ம கும்பல்... சீக்கியர், அவரது 11 வயது மகன் சுட்டுக்கொலை!

By காமதேனு

மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் கனடாவில், சீக்கியரும் அவரது 11 மகனும் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எட்மண்டன் நகரில் கேஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்பிரீத் சிங் உப்பல் (41) என்பவரும், அவரது 11 வயது மகனும் காரில் இருந்த போது, மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

காரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல், பின்னர் கேஸ் நிலையம் அருகே திடீரென தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. காரின் உள்ளே 11 வயது சிறுவன் இருப்பது தெரிந்தும் இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலின் போது சிறுவனின் நண்பன் காரில் இருந்துள்ளான். ஆனால், அந்த சிறுவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது கும்பல் தாக்குதலாக இருக்கக்கூடும் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட உப்பலுக்கு எதிராக போதை பொருளை பதுக்கி வைத்தல், கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை விரைவில் தொடங்க இருந்த நிலையில், திடீரென துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.

அதே போல், உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தார் என்றும், ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தினார் என்றும் உப்பல் மீது கடந்த 2021-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனவே, அவருக்கு எதிரான மற்றொரு கும்பல் அவரை கொன்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முன்விரோதம் காரணமாக உப்பல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ஆனால் முழுமையான விசாரணைக்கு பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என்று கூறியுள்ளனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் கனடாவில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE