கனமழை எதிரொலி | பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு @ ஈரோடு

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்வது வருவதாலும், பில்லூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதாலும் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து 7,762 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணையில் 105 அடி வரை 32.8 டிஎம்சி நீரினைத் தேக்கி வைக்க முடியும். பவானிசாகர் அணை மூலம் 2.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகின்றன. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கான பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கும் பவானிசாகர் அணை நீராதாரமாக உள்ளது.

பருவமழை பொய்த்து போனதாலும், கோடையின் தாக்கத்தாலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிந்தது. இதனால், அரசாணையின்படி, கீழ்பவானி பாசனத்துக்கு நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. பவானிசாகர் அணையில் இருந்து குடிநீருக்காக மட்டும் 205 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதாலும், பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக நீர் திறக்கப்படுவதாலும், பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (வியாழக்கிழமை) காலை 7,762 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 47.73 அடியாகவும், நீர் இருப்பு 3.90 டிஎம்சியாகவும் அதிகரித்துள்ளது.

கொடிவேரியில் குளிக்கத் தடை: இதனிடையே, ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று இரவு கனமழை பெய்ததால் குளங்கள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. நம்பியூர் பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பியதால், அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொடிவேரி அணைப்பகுதியில் 69 மி.மீ. மழை பதிவாகியுள்ள நிலையில், அணையில் இருந்து 600 கன அடிக்கு மேல் நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், கொடிவேரி அணையில் குளிக்கவும், படகு சவாரி செய்யவும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டேரிப்பள்ளம் பகுதியில் 124 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE