திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்: பக்தர்கள் அச்சம்

By சு.கோமதிவிநாயகம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதியில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியுள்ளதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் தற்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா நடைபெற்று வருகிறது. கடலில் பக்தர்கள் நீராடி கொண்டிருந்த போது உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோயில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களிடம் பக்தர்கள் தெரிவித்தனர்.

பணியாளர்கள் கடற்கரை பகுதியில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவதை பார்த்தனர். இதில் சுமார் 3 கிலோ எடை கொண்ட ஒரு பெரிய ஜெல்லி மீன் கரை ஒதுங்கியது. அதை எடுத்து வந்த பணியாளர்கள் கடற்கரை பகுதியில் தோண்டி புதைத்தனர். மேலும் சில சிறிய அளவிலான ஜெல்லி மீன்களை கடலுக்குள் விட்டனர். இந்த ஜெல்லி மீன்களால் உடலில் அரிப்பு ஏற்படுவதோடு தோல் நோய் உருவாகும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE