கரூர்: வந்தே பாரத் ரயிலை எம்.பி ஜோதிமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்: பாஜகவினர் பங்கேற்பு  

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: மதுரையில் இருந்து பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி டெல்லியிருந்து காணொலியில் இன்று (ஆக. 31ம் தேதி) தொடங்கி வைத்தார்.

இதையொட்டி கரூர் ரயில் நிலையத்தில் காணொலியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத்தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் சக்தி உள்ளிட்ட கட்சியினர் திரளாக பங்கேற்றனர். மீண்டும் மாலை கரூர் ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரயில் வருகையையொட்டி கரூர் எம்.பி. செ.ஜோதிமணி, காங்கிரஸார் ரயில் நிலையம் வந்திருந்தனர். மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் சக்தி உள்ளிட்ட பாஜகவினர் திரண்டிருந்தனர்.

ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த 2 கரூர் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் ரயில் நிலையம் வந்திருந்தனர். ரயில் வருகைக்காக அனைவரும் காத்திருந்த நிலையில் திடீரென சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் மழை பெய்தது. கரூர் ரயில் நிலையத்திற்கு மாலை 3.58 மணிக்கு வந்த ரயிலை மலர் தூவி வரவேற்றனர். பாஜகவினர் மோடியை வாழ்த்தியும், காங்கிரஸார் ராகுல் காந்தியை வாழ்த்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

கரூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று புறப்பட்ட ரயிலை கரூர் எம்.பி. செ.ஜோதிமணி மற்றும் சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் சிவலிங்கம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கரூர் ரயில் நிலைய மேலாளர் இக்னிஷியஸ் சேவியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருச்சியில் இருந்து 100க்கும் மேற்பட்ட பயணிகள் கரூரில் இறங்கினர். கரூரில் இரு தனியார் பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள் அவர்களது குடும்பத்தினர் என 200க்கும் மேற்பட்ட கரூரில் இருந்து நாமக்கல்லுக்கு ரயிலில் பயணம் செய்தனர்.

கரூர் ரயில் நிலையத்தில் விரைவில் ஆய்வு: எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தது: ''மதுரை பெங்களூரு வந்தே பாரத் சோதனை ஓட்டம் நடந்தப்போதே கரூரில் நிற்காது எனக் கூறப்பட்ட நிலையில் இதுதொடர்பாக ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து கரூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்கிறது. கரூரில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் அதனை சுற்றியும் ஏராளமானோர் வசிக்கும் முக்கியமான தொழில் நகரமாகும்.
கரூர் மக்களவைத் தொகுதியில் ரயில்வே தொடர்பான ஏராளமான கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

கரூர் பகுதியில் மட்டும் 4 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் ஈரோடு உளளிட்ட வழித்தடங்களுக்கு ரூ.1,000 மட்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கவேண்டும். கரூர், மணப்பாறை ரயில்வே மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரூர் ரயில் நிலையத்தில் ஏற்கெனவே ஆய்வு நடத்திய நிலையில் 4 வாரங்களுக்கு கரூர் ரயில் நிலைய த்தில் ஆய்வு நடத்தப்படும். அம்ரித் பாரத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தப்படும்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE