திருச்சி: பிரதமர் மோடியால் இன்று தொடங்கி வைக்கப்பட்டு மதுரையில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டு, திருச்சிக்கு வந்த வந்தே பாரத் ரயிலுக்கு, ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை - நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூர் இடையே செல்லக்கூடிய இரண்டு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில், மதுரையில் இருந்து பெங்களூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் மதுரையில் மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு, திண்டுக்கல் வழியாக திருச்சிக்கு பிற்பகல் 2.58 மணிக்கு வந்தடைந்தது.
திருச்சி ரயில் நிலையத்தில், திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா, திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் எம்.எஸ்.அன்பழகன், தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் கொடியசைத்து வரவேற்று, வழியனுப்பி வைத்தனர்.
மதுரையிலிருந்து வந்த வந்தே பாரத் ரயிலுக்கு, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில், பாஜகவினர், பள்ளி மாணவ, மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு, உற்சாக வரவேற்பு அளித்தனர்.
» பார்முலா 4 கார் பந்தய பயிற்சி போட்டிகள் இரவு 7 மணிக்கு தொடக்கம்: புதிய அட்டவணை வெளியீடு!
» பொத்தேரி தனியார் விடுதியில் கஞ்சா புழக்கம்: பிரபல ரவுடி கைது; மாணவர்களிடம் போலீஸார் விசாரணை
தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வந்தே பாரத் ரயில் மூலம் கரூர் வரை அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து பேருந்து மூலம் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். அதேபோல சென்னையிலிருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்வதற்காக 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மெமோ ரயில் மூலம் இன்று காலை 10.50 மணிக்கு விழுப்புரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து மாணவ, மாணவிகள் வந்தே பாரத் ரயிலில் ஏறி திருச்சி வந்து சேர்ந்தனர். ஆர்பிஎப் போலீஸார் அவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
தொடர்ந்து எம்பி திருச்சி சிவா செய்தியாளர்களிடம் கூறியது: ''திருச்சி வழியாக 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்குவது வரவேற்கத்தக்கது. இந்த ரயில்கள் ஏற்கனவே தொடங்கி வைக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அண்மையில் ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து விரைவில் தொடங்குங்கள் என கோரிக்கை வைத்தேன். இன்று பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த 2 ரயில்களும் திருச்சி வாழ் மக்களுக்கும், வழி நெடுக இருக்கும் மக்களுக்கும் பெரும் பயன் தரும்'' என்றார்.
கார்த்தி சிதம்பரத்துக்கு திருச்சி சிவா விளக்கம்: திருச்சி போன்ற நகரங்களுக்கு மெட்ரோ ரயில் தேவையில்லை என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டபோது, ''தங்கள் தேவை என்ன என்பதை மக்கள் சொல்வார்கள். எது தேவை என்பதை அரசு முடிவு செய்யும். திருச்சி வளர்ந்த நகரம், வளர்ந்து கொண்டிருக்கும் நகரம். போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மதுரை, கோவை போல திருச்சிக்கும் மெட்ரோ ரயில் தேவை. தேவை என்பது காலத்தின் கட்டாயம். அது எதுவோ அதை மக்கள் கோரிக்கையாக கருத்தில் கொண்டு மாநில அரசு அதை முயற்சி எடுத்து வருகிறது. மத்திய அரசு அதற்கான பங்கை செய்வார்கள்'' என்றார்.