தென்காசி: குண்டாறு அணையில் 41 மி.மீ. மழை பெய்துள்ளதால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.
தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இன்று காலை வரை 24 மணி நேரத்தில் குண்டாறு அணைப் பகுதியில் 41 மி.மீ. மழை பதிவானது. செங்கோட்டையில் 16.80 மி.மீ., அடவிநயினார் அணையில் 12 மி.மீ., கடனாநதி அணையில் 9 மி.மீ., தென்காசியில் 4 மி.மீ., சிவகிரியில் 2 மி.மீ. மழை பதிவானது.
குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 60 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 65.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 54.14 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 109.50 அடியாகவும் இருந்தது.
» பொத்தேரி தனியார் விடுதியில் கஞ்சா புழக்கம்: பிரபல ரவுடி கைது; மாணவர்களிடம் போலீஸார் விசாரணை
» தேவநாதன் யாதவின் அலுவலகத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்: போலீஸார் அதிரடி
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. விடுமுறை தினமான இன்று சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர்.