தேவநாதன் யாதவின் அலுவலகத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்: போலீஸார் அதிரடி

By KU BUREAU

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவின் மயிலாப்பூர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 3 கிலோ மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி, 144 முதலீட்டாளர்களிடம் ரூ. 24.50 கோடி மோசடி செய்ததாக அந்நிறுவன இயக்குநரான தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில், நிதி நிறுவனத்தின் உரிமையாளரான தேவநாதனுக்கு சொந்தமான அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 3 கிலோ தங்கம் மற்றும் அளவுக்கதிகமான வெள்ளி பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தேவநாதன் யாதவை நேரடியாக, அவரது அலுவலகத்துக்கு அழைத்து வந்து, அவரது லாக்கர் உள்ளிட்டவற்றை திறந்து சோதனை மேற்கொண்டதாகவும், இந்த சோதனையில் 3 கிலோ தங்கம், 35 கிலோ வெள்ளி பொருட்கள், நிலம் தொடர்பான 15 ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

முன்னதாக, தேவநாதன் உள்ளிட்டோரை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் உள்ள தேவநாதன் யாதவ், 2024 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE