கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம்?... திமுக நாளை கலந்தாலோசனை!

By காமதேனு

திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நாளை நடைபெறுகிறது.

தேர்தல்

மக்களவைத் தேர்தலுக்கான தேதி சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. மக்களவைத் தேர்தலையொட்டி திமுக சார்பில் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழு, கூட்டணி பேச்சு நடத்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தல் அறிக்கையை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மக்களிடம் கருத்துக் கேட்டு என்னென்ன கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தேர்தல் அறிக்கைப் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அதே போல அதிமுகவும் குழு அமைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

துரைமுருகன்

இந்த நிலையில், திமுகவுடன் கூட்டணிக் கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. எத்தனை இடத்தில் போட்டியிடுவது, எந்த சின்னத்தில் போட்டியிடுவது, எந்த தொகுதியில் போட்டியிடுவது என அந்தக் கட்சிகள் பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை(பிப்ரவரி 23) காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் பிப்ரவரி 23-ம் தேதி (வெள்ளிக்கிழமை), காலை 11.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE