பாஜக ஆளுகின்ற மாநிலங்கள் எல்லாம் உத்தமர்களா? பொன்முடி இதற்கெல்லாம் அஞ்சமாட்டார்: கே.எஸ்.அழகிரி தடாலடி

By காமதேனு

தமிழக முதல்வர் பெங்களூர் சென்றுள்ளார் என்பதற்காக பாஜக பயந்து நடுங்குகிறது. அவர் எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்கிறார், என்ற ஒரே காரணத்திற்காக தமிழக அரசு மீது குற்றம் சாட்டுகிறார்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ பொன்முடி அமைச்சர் அவர்களது வீட்டில் சோதனை நடைபெறுகிறது, இது எதிர்பார்த்ததுதான். தமிழக முதல்வரும் எதிர்பார்த்ததுதான். 2012 ம் ஆண்டில் 10 லாரிகள் அதிகமாக செம்மண் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 11 ஆண்டுகள் கழித்து தற்பொழுது சோதனை நடைபெற்று வருகிறது. ஒரு ஊராட்சி ஒன்றியம் செய்கின்ற வேலையை மத்திய அரசு செய்கிறது.

மத்திய அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ, அதே அதிகாரம் மாநில அரசுக்கும் இருக்கிறது. இதை மாநில அரசு மறந்துவிட வேண்டாம். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களது போலீஸ் கமிஷனரை சிபிஐ விசாரித்தது. உடனே மத்திய அரசுக்கே தெரியாமல் உடனடியாக மேற்கு வங்க போலீசை அனுப்பி 80 சிபிஐ அதிகாரிகளை கைது செய்து அழைத்து வந்தது. அவர்களுக்கும் அதிகாரம் உள்ளது என்பது அப்பொழுதுதான் தெரிந்தது. மாநில அரசுக்கும் இப்படிப்பட்ட அதிகாரம் உள்ளது என்பதை அப்போதுதான் புரிந்து கொண்டார்கள்.

பாரதிய ஜனதா ஆளுகின்ற மாநிலங்கள் எல்லாம் உத்தமர்களா. ஏன் அங்கெல்லாம் சோதனை நடைபெறவில்லை. அங்கே செல்ல வழி தெரியவில்லையா. அதேபோல் உங்கள் தோழமைக் கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் எல்லாம் ஏன் இதுவரை சோதனை நடைபெறவில்லை. தமிழ்நாட்டில் முன்பு இருந்த உங்கள் தோழமைக் கட்சி வீடுகளிலெல்லாம் ஏன் சோதனை நடைபெறவில்லை.

தமிழக முதல்வர் பெங்களூர் சென்றுள்ளார் என்பதற்காக ஏன் பயந்து நடுங்குகிறீர்கள். அவர் எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக தமிழக அரசு மீது குற்றம் சாட்டுகிறீர்கள். தமிழக அமைச்சர் மீது உள்ள குற்றச்சாட்டு, செம்மண் திருடி விட்டார் என்பது. இதற்கு கனிமவளத்துறை அதிகாரிகளை விசாரணை செய்து விட்டு செல்லலாமே. இதை காங்கிரஸ் கட்சி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. இதை தமிழக மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்.

எல்லோரையும் பயமுறுத்த வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. ஒரு தனியார் தொலைக்காட்சி இந்தியா முழுவதும் தன்னிச்சையாக வாக்கெடுப்பு நடத்தியதில் தென் மாநிலங்கள் முழுவதும் எழுவது சதவீதம் பாரதிய ஜனதாவை எதிர்க்கிறார்கள். 30 சதவீதத்துக்குக் கீழ் தான் பாரதிய ஜனதாவை ஆதரிக்கிறார்கள் என்று கூறியுள்ளது. இந்த நிறுவனம் ஒரு காலத்தில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக கணக்கெடுப்பு நடத்தியது. தற்பொழுது நிலைமை மாறி உள்ளது. மத்தியில் ஆளும் 33 அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது. ஏன் அவர்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறை செல்லவில்லை. அவர்கள் என்ன உத்தமர்களா. இந்திய விளையாட்டு வீரர்கள் 40 பேர் ரோட்டில் நின்று பாலியல் தொல்லை தந்ததாக ஒரு எம் பி யின் மீது குற்றச்சாட்டுகிறார்கள். ஆனால் அந்த எம்பி இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் நாடாளுமன்றத்திற்கு சர்வ சாதாரணமாக வந்து செல்கிறார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இருக்கிற பாதுகாப்பு கூட, ஒரு மாநில அமைச்சருக்கு கிடையாதா?. பொன்முடி இதற்கெல்லாம் ஒன்றும் பயப்பட மாட்டார்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை சென்றாலும் சரிதான், அவர் உருண்டு புரண்டாலும் சரிதான். அவர் எந்த ஊழல் குற்றச்சாட்டு கூறினாலும் சரிதான். எங்களுக்கு ஒன்றும் கவலை இல்லை. மக்கள் அதை மதிக்க மாட்டார்கள். தமிழக கவர்னர் தேவையில்லாமல் தமிழக அரசில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை உபயோகம் செய்கிறார். இவர் மூன்று முறை தமிழக அரசை எதிர்த்துப் பார்த்தார், ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் கவர்னருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று அவருக்கே தெரியும். எத்தனையோ கவர்னர் தமிழ்நாட்டில் இருந்து உள்ளார்கள். தமிழ்நாட்டில் இந்த கவர்னர் ஏதோ கோபத்தில் உளறிக் கொண்டு உள்ளார்” என்று கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE