மதுரை: மதுரையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலப்பனங்காடி கருப்பையாபுரம் உள்ளிட்ட மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர், சாலை வசதி, குப்பை அகற்றுதல் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து பொதுமக்கள் காலி குடங்களுடன் மதுரை குலமங்கலம் மெயின் ரோட்டில் அமர்ந்து இன்று காலை மறியல் போராட்டம் செய்தனர். இது பற்றி தகவல் அறிந்த போலீஸார், மாநகராட்சி அதி காரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. பொதுமக்களின் இந்த திடீர் மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.