குரூப்-1 தேர்வுடன் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு: வயது வரம்பில் தளர்வு அளிக்க கோரிக்கை

By KU BUREAU

சென்னை: தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு, குரூப்-1 தேர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதோடு அடிப்படை கல்வித் தகுதியும் மாற்றப்பட்டு வயது வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையை தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை செயலர்கொ.வீரராகவராவ் வெளியிட்டுள்ளார். இந்த அரசாணையின்படி, தொழிலாளர் நலத்துறை உதவிஆணையர் தேர்வுக்கு தற்போது நடைமுறையில் இருந்து வரும் அடிப்படை கல்வித்தகுதி (தொழிலாளர் நலன் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் தொழிலாளர் நலன் டிப்ளமோபடிப்பு) மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வு குரூப்-1 தேர்வுடன் இணைக்கப்படுவதால் இதற்கும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். மேலும், இப்பதவிக்கு பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 30 ஆக இருந்தது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி, எம்பிசி, எஸ்சி,எஸ்டி) வயது வரம்பு கிடையாது.

ஆனால், தற்போது குரூப்-1 தேர்வுடன் இத்தேர்வு இணைக்கப்பட்டுள்ளதால் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு கட்டுப்பாடு இதற்கும்பொருந்தும். குரூப்-1 தேர்வில்வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 34 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தேர்வர்கள் கூறும்போது, "உதவி ஆணையர் தேர்வை எதிர்பார்த்து கடந்த 2 ஆண்டுகளாக படித்து வருகிறோம். முன்பு இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. தற்போது வயது வரம்பு 39 என நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் 39 வயது கடந்தவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.

தொழிலாளர் சட்டம் படித்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்வுஅளிக்க வேண்டும். இல்லையெனில் வயது வரம்பை தளர்வை குறைந்தபட்சம் ஒருமுறையாவது வழங்க வேண்டும். நாங்கள் எங்களுக்கு வேலை கேட்கவில்லை. வேலைக்கான தேர்வை எழுதுவதற்கு வாய்ப்பு தாருங்கள் என்றுதான் கேட்கிறோம். எனவே, எங்களின் நியாயமான கோரிக்கையை தொழிலாளர் நலத்துறை பரிசீலிக்க வேண்டுகிறோம்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE