சென்னை: பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமக்ரா சிக்ஷா திட்ட நிதி (ஒருங்கிணைக்கப்பட்ட கல்வித் திட்டம்) ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்துக்கு பதில் அளிக்கும் வகையில் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
நாடு முழுவதும் உள்ள 14,500 பள்ளிகளை, பிஎம் ஸ்ரீ திட்டத்தின்கீழ் மேம்படுத்த மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவர். இந்த பள்ளிகள்முன்மாதிரி பள்ளிகளாகவும், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அமல்படுத்துவதாகவும் இருக்கும்.
முதல்கட்டமாக 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 6,448 பள்ளிகளை தரம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான திட்டத்தையும், ஒப்பந்தத்தையும் தமிழக அரசுக்கு, மத்திய அரசு அனுப்பியிருந்தது. இதற்கு தமிழக அரசும் சம்மதம் தெரிவித்திருந்தது.
2023-24-ம் நிதி ஆண்டில் இத்திட்டத்துக்கான ஒதுக்கீட்டின்கீழ் நான்கு தவணைகளாக ரூ.1,876.15 கோடி முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டுக்கு ரூ.4,305.66 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, பிரதமரின் ஸ்ரீபள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு தொடக்கத்தில் ஒப்புக்கொண்டது. ஆனால்,இதுவரை கையெழுத்திடவில்லை.
கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்கும், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும் பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை தமிழகம் ஏற்றுக்கொள்வது முக்கியம். கூட்டு முயற்சிகள் மூலம், அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் கல்வி முறையை உருவாக்குவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஏற்கெனவே முன்வந்தபடி, பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.