தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம், வரும் மார்ச் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், பெற்றோர்கள் தங்களது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தவறாது போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க, பிறந்தது முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து ஆண்டுதோறும் பொது சுகாதாரத்துறை மூலம் வழங்கப்படுகிறது. 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. இதன் பயனாக, போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்ததால், கடந்த 4 ஆண்டுகளாக, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, இந்தாண்டு தமிழகம் முழுவதும் வரும் மார்ச் 3-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்ற சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மொத்தம் 43,051 இடங்களில் 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகளில் நடமாடும் வாகனம் மூலம், காலை 7 மணி முதல் மாலை, 5 மணி வரை சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.