‘ஏ.ஐ-யை வச்சு எதிர்க்கட்சிகள் பண்ற சதி!’ - அமைச்சர் முத்துசாமி ஆவேசம்

By சானா

'குடிமக்கள் படும் சிரமங்களைக் களைவதுதான் அமைச்சர் பெருமக்களின் அடிப்படைக் கடமை’ என்று யாரோ ஆரம்பகால அரசியல் தலைவர் எழுதிவைத்த புத்தகத்தைச் சத்தமாக வாசித்துக்கொண்டிருந்தார் அமைச்சர் முத்துசாமி.

குடிமக்கள்(!) மீது அமைச்சர் அநியாயத்துக்குப் பாசம் காட்டுவதை அருகில் இருந்து பார்த்து ஆனந்தப்பட்ட அடிமட்டத் தொண்டர்கள், “முத்துசாமி அண்ணன் சேவை செய்றதுல செந்தில் பாலாஜியை முந்திடுவாரு போலயே. குடிமக்களுக்கு ஒண்ணுன்னா துடிதுடிச்சுப் போய்டுறாரே… என்ன இருந்தாலும் எம்ஜிஆர் காலத்து ஆளாச்சே” என்று சென்டிமென்டாக உருகிக் கொண்டிருந்தார்கள். முத்துசாமியின் தலைக்குப் பின்னே முகம் முழுக்க கவலை படிந்த மு.க.ஸ்டாலினின் புகைப்படம் தெரிந்தது.

‘குடிமைப்’ பணியில் தாங்கள் எதிர்கொள்ளும் குறைபாடுகள் குறித்து முறையிட வந்திருந்த குடிமக்கள் கூட்டம் ஒன்று, அமைச்சரின் அலுவலகத்துக்கு வெளியே ‘ஸ்டெடியாக’ நின்றுகொண்டிருந்தது.

ஒருவழியாகப் புத்தக வாசிப்பை முடித்துக்கொண்ட முத்துசாமி, “ஒவ்வொருத்தரையா உள்ளே வரச் சொல்லுப்பா” என்று உதவியாளருக்கு உத்தரவிட்டார்.

முதலாவதாக உள்ளே நுழைந்த மூத்த ‘குடிமகர்’ ஒருவர், “தினமும் எங்களைப் பத்தியே கவலைப்பட்டு திட்டம் தீட்டுற தெய்வம்யா நீங்க” என்று பாசமழை பொழிந்தார்.

அன்னாரின் வயதைவிடவும், ‘குடிமை’ப் பணியில் அவரது அனுபவம் அதிகம் என்பதை அவரது சிவந்த கண்களே காட்டிக்கொடுத்தன. அதைக் கவனித்த அமைச்சர், “சரக்கு வாங்க வர்றவங்க வயசையெல்லாம் கணக்கெடுக்க ப்ளான் பண்ணியிருக்கோம். இனிமே பர்த் சர்ட்டிஃபிகேட் இருந்தாத்தான் பாட்டில் கிடைக்கும்னு அறிவிச்சாலும் அறிவிப்போம். அறிவிச்சிட்டு அறிவிக்கலைன்னு சொல்லவும் வாய்ப்பிருக்கு பார்த்துக்கிடுங்க.

நீங்க பல வருசம் சர்வீஸ்ல இருக்கீங்கன்னு பார்த்தாலே தெரியுது. அரசுக்கு வருமானம் கிடைக்க இத்தனை வருசம் நீங்க உழைச்சதே(!) போதும். பேசாம ரிட்டயர்டு ஆகிடுங்களேன்” என்று அக்கறையுடன் அறிவுறுத்தினார். “ஆகிடலாம்தான். ஆனா, நீங்க டெட்ரா, குட்ரான்னு புதுசு புதுசா ஐடியாக்களை அள்ளிவிட்டு ஆர்வத்தைத் தூண்டுறீங்களே! மெட்ரோ வாட்டரையெல்லாம் டேஸ்ட் பண்ணுன நானு, டெட்ரா மேட்டரை மிஸ் பண்ண முடியும்ங்களா!” என்று அந்த சீனியர் குடிமகன் சீரியஸாகக் கேட்க, அமைச்சர் அமைதியானார்.

அடுத்து வந்தவர், “நீங்க கொடுத்த பேட்டியை எல்லாம் பார்த்துட்டு, இனி ஏழு மணிக்கெல்லாம் ‘கடை’யைத் திறந்துடுவீங்கன்னு எதிர்பார்த்தோம். இப்படி ‘காவாலய்யா’ பாட்டுல கண்ணாடியை மாட்டுற சீன்ல மட்டும் வர்ற தலைவர் மாதிரி கடைசி நேரத்துல ஏமாத்திட்டீங்களே!” என்று அங்கலாய்த்தார். மேலிட உத்தரவு வரும்வரையில் அமைச்சரால் மேற்கொண்டு எதையும் செய்ய முடியாது என வந்தவருக்கு எப்படித் தெரியும்?

மூன்றாவதாக வந்த குடிமகன், “இந்தத் துறையில(!) இருக்கிற எல்லாரும் சொல்ற கம்ப்ளெய்ன்ட் தான் சார். எந்தக் கடைக்குப் போனாலும் எக்ஸ்ட்ரா பத்து ரூபாய் கேட்கிறாங்க. ‘பத்து ரூபா பாலாஜி’ன்னு சொல்லிட்டு இருந்தவங்க இப்ப ‘பத்து ரூபா முத்துசாமி’ன்னு கிண்டல் பண்றாங்க. இதுக்கு ஒரு முடிவே கிடையாதா?” என்று கேட்க, அந்தச் சமயம் பார்த்து காவலர் ஒருவர் எதற்கோ உள்ளே நுழைய, ‘மண்ட பத்ரம்’ என்று மருண்டுபோன குடிமகன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

அப்போது அங்கு வந்த ஊடகவியலாளர்கள், “ஒரே விஷயத்தை அடுத்தடுத்த பேட்டியில அப்படியே மாத்திப் பேசுறீங்களே. ஏன் சார்?” எனக் கேள்வி எழுப்பினர். அசராத அமைச்சர், “அதுல ஒரு பேட்டி மட்டும்தான் நான் கொடுத்தது. மத்ததெல்லாம் ஏ.ஐ-யை யூஸ் பண்ணி என்னை மாதிரியே உருவம் செஞ்சு எதிர்க்கட்சிகள் பண்ணின சதி” என்று அடித்துச் சொல்ல... ஊடகவியலாளர்கள் உறைந்துபோய் நின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE