புதுச்சேரியில் தொடங்கியது சாலையோர வியாபாரிகள் உணவுத் திருவிழா!

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி நகர வளர்ச்சி முகமை மற்றும் உள்ளாட்சி துறை சார்பில், புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகள் மற்றும் இந்தியன் வங்கி இணைந்து நடத்தும் சாலையோர வியாபாரிகள் உணவு திருவிழா, மகளிர் சுய உதவி குழு பொருட்களின் கண்காட்சி இன்று (ஆக. 30) தொடங்கி (செப்.1) வரை நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழா கடற்கரை சாலையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு உணவு திருவிழா மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்தார். திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியவர்களுக்கான விருதுகளையும் வழங்கினார்.

விழாவில் முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், தலைமை செயலர் சரத் சவுகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: “பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் நாட்டின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருப்பவர் என்பதை பார்க்கலாம். குறிப்பாக நம்முடைய நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று எண்ணுபவர் பிரதமர். யார் யாரை எந்த வகையில் உயர்த்த வேண்டும் என்பதை சிந்தித்து அவர்களுக்கு ஏற்றவாறு திட்டங்களை கொண்டு வருகின்றார். அதன்மூலம் அவர்களின் வருமானம் உயரும் போது, நம்முடைய பொருளாதாரமும் உயரும். நாட்டின் வளர்ச்சியும் எல்லோரும் பாராட்டும் வகையில் இருக்கும்.

புதுச்சேரியில் 2447 பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகள் பிரதமரின் திட்டத்தால் பயனடைந்துள்ளனர். புதுச்சேரி தனிநபர் வருமானத்தில் முதலிடம் பெறும் மாநிலமாக உள்ளது. புதுச்சேரியின் தனிநபர் வருமானம் ரூ.2.75 லட்சமாக உயர்ந்துள்ளது. பெரிய, சிறிய வியாபாரிகள், தொழிற்சாலை, கல்வி என அனைத்திலும் புதுச்சேரி மாநிலம் சிறந்து விளங்குவதால் தான் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது. இதற்கு வியாபாரிகள், விவசாயிகள், தொழிலதிபர்கள் கொடுக்கும் ஒத்துழைப்பு அதன் மூலம் உயரும் வருமானம் தான் பொருளாதாரத்தை உயர்த்தி இருக்கிறது. மேலும் வணிகவரித்துறை, கலால்துறை மூலமும் வருமானம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரி வளர்ச்சியடைந்துள்ளது. இதனை யாராலும் மறுக்க முடியாது.

பிரதமரின் உதவியோடு புதுச்சேரி பெரிய வளர்ச்சி கண்டு வருகிறது. மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் போது கடைகள் அதிகமாக தேவைப்படுகிறது. இதுபோன்ற நிலையில் சாலையோர கடைகளும் நமக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது. புதுச்சேரி மாநிலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதுடன், சாலையோரக் கடைகளில் தான் அவர்கள் உணவை உண்கின்றனர். ஆகவே சுற்றுலா பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலையோரக் கடைகள் இருப்பது அவசியமாகிறது. ஆனால் சாலையோரங்களில் அமைக்கப்படும் கடைகளால் விபத்து நேரிடாமல் இருப்பதும் அவசியம். அதனால் சாலையோரங்களில் விபத்துகள் தவிர்க்கும் வகையில் ஒழுங்குமுறையுடன் கடைகள் அமைக்கப்பட வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE