சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்காக லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். 3 மாதங்கள் லண்டனில் தங்கி படிக்கும் அண்ணாமலை, வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்ப உள்ளார்.
இந்நிலையில், அண்ணாமலை திரும்ப வரும்வரை தமிழக பாஜகவை நிர்வகிக்க எச்.ராஜா உட்பட 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் அரண் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை, இங்கிலாந்தில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு கல்வி பயிற்சித் திட்டத்தில் கலந்து கொள்கிறார். மாநிலத் தலைவர் இல்லாத நிலையில், கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் வழிகாட்டுதலின்படி குழு அமைக்கப்பட்டுள்ளது.
» பம்மல்: தெருவில் கழிவுநீர் தேங்குவதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
» கல்லூரி பெண்கள் விடுதி கழிப்பறையில் ரகசிய கேமரா: வீடியோக்களை விற்பனை செய்த மாணவன் கைது
குழுவின் ஒருங்கிணைப்பாளராக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா நியமிக்கப்படுகிறார். குழுவின் உறுப்பினர்களாக மாநில துணைத் தலைவர் எம். சக்கரவர்த்தி, மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர் எம். முருகானந்தம், மாநில பொதுச் செயலாளர் ராம. சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
இந்த குழு, மாநில உயர்நிலைக் குழுவோடு கலந்தாலோசித்து கட்சி சார்ந்த முடிவுகளை எடுக்கும். குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களும் மாநில தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு மண்டலங்களை கவனித்துக்கொள்ள வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.