பிரதமர் மோடிக்கு துரோகம் செய்தவர் உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே விளாசல்!

By காமதேனு

தேர்தலில் வெற்றி பெற பால் தாக்கரே மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர்களைப் பயன்படுத்திய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பாஜகவுடனான இயற்கையான கூட்டணியை உடைத்து துரோகம் செய்தார் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கடுமையாக சாடியுள்ளார்.

அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பிரிவு ஆளும் கூட்டணியில் இணைந்ததை அடுத்து மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஏக்நாத் ஷிண்டே, தானேயில் நடந்த பேரணியில் பேசினார். அப்போது, "உத்தவ் தாக்கரே பால்தாக்கரே மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்களைப் பயன்படுத்தி வாக்குக் கேட்டு, பின்னர் காங்கிரஸுடன் கைகோர்த்து அவர்களுக்குத் துரோகம் செய்தார்கள். வாக்காளர்களைக் கைவிட்டு, அதிகாரத்திற்காக மக்களின் ஆணையைத் தவறாகப் பயன்படுத்தினார்கள். இதில் யார் உண்மையான துரோகிகள்?. 370வது பிரிவை நீக்கும் பால் தாக்கரேவின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றினார். ஆனால் உத்தவ் தாக்கரே பிரதமருக்கு துரோகம் செய்து விட்டார்” என்று கூறினார்.

மேலும்,"பாஜகவிடம் போதுமான எண்ணிக்கை இருந்தது. ஆனால் தேவேந்திர பட்னாவிஸ் தனது பெரிய மனதால் சிவசேனாவை ஆட்சியமைக்க அனுமதித்தார். இன்று அவர்கள் (உத்தவ் தாக்கரே பிரிவு) பட்னாவிஸை தூற்றுகிறார்கள். முந்தைய உத்தவ் தாக்கரே அரசாங்கத்தின் இரண்டரை ஆண்டுகளில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எங்கள் வேகத்தை அதிகரிக்க, இப்போது எங்களுடன் அஜித் பவார் இருக்கிறார்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE