பம்மல்: தெருவில் கழிவுநீர் தேங்குவதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் 

By பெ.ஜேம்ஸ் குமார்

பம்மல்: பல்லாவரம் அருகே பம்மலில் இன்று காலை கழிவு நீர் தெருக்களில் குளம் போல் தேங்குவதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட, பம்மல் 7- வது வார்டு பகுதியான அண்ணா நகர், தயாளன் தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளன. அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை அத்தெருவில் கழிவுநீர் குளம் போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசியது. மேலும், ஒரு சில வீடுகளின் உள்ளேயும் கழிவு நீர் சென்றதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென ஒன்று திரண்டு பம்மல், நல்லதம்பி சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சங்கர் நகர் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனை ஏற்க மறுத்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் வேறு வழியின்றி அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். பின்னர் அவர்களை பேருந்தில் ஏற்றி, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் தேங்கி நின்ற கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், ''தெருக்களின் குளம்போல் கழிவுநீர் தேங்குவதால் டெங்கு, மலேரியா, காலரா போன்ற நோய்கள் பரவும் அச்சத்தில் உள்ளோம். இது குறித்து தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனிமேலாவது எங்கள் பகுதியில் கழிவுநீர் தெருக்களில் தேங்குவதைத் தடுக்க அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும். இல்லை என்றால் எங்களது போராட்டம் தொடரும்'' என்றனர். பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE