அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகிறேன் - அண்ணாமலை ட்விட்

By காமதேனு

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தான் ஆஜராகப் போவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

திமுகவை சேர்ந்த 12 நபர்களுடைய சொத்துப் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டிருந்தார். இதில் திமுக அமைச்சர்கள் உள்பட பல முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த பட்டியல் தொடர்பாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அண்ணாமலைக்கு திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால், அண்ணாமலை அதைப் பொருட்படுத்தவில்லை. அதையடுத்து, அண்ணாமலையின் பட்டியலில் உள்ள திமுகவினர் பலரும் தனித்தனியாக அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தனர். அதில் திமுகவின் பொருளாளர் டி.ஆர் பாலுவும் ஒருவர். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. இதில் அண்ணாமலை நேரில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.

அவரின் அந்த ட்விட்டர் பதிவில் "திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு டி.ஆர். பாலு சொத்துக் குவிப்பு பற்றிய தகவல்களை பிஜேபி சார்பாக திமுக ஃபைல்ஸ் வெளியிட்டது தொடர்பாக அவர் என்மீது தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராக உள்ளேன்.

ஊழல் என்னும் கரையான் இத்தனை ஆண்டு காலம் நம் நாட்டை எப்படி அரித்திருக்கிறது என்றும் அதனை அரசியலில் இருந்து முழுமையாக அப்புறப்படுத்த வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதையும் பொதுமக்கள் அறிவார்கள்' என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE