சென்னை: சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தேனாம்பேட்டை உள்ளிட்ட 4 மண்டலங்களில் ரூ.26 கோடியில் 16 இடங்களில் நடைப்பயிற்சி பாதைகள் அமைப்பது உள்ளிட்ட 53 தீர்மானங்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சி மன்றகூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 35-வதுவார்டு மதிமுக கவுன்சிலர் ஜீவன் பேசும்போது, வட சென்னையில் உள்ள பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை என புகார் தெரிவித்தார்.
நிலைக்குழு தலைவர் (கல்வி) விஸ்வநாதன், சென்னையில் ஆட்சேபம் இல்லாத அரசுபுறம்போக்கு நிலத்தில் 1லட்சம் குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களின் குடியிருப்புகளுக்கு சொத்துவரி மதிப்பிடாததால், அவர்களுக்கு அரசின் குடிநீர்,கழிவுநீர், மின்சாரம் உள்ளிட்ட இணைப்புகளை பெற முடிவதில்லை.
வருவாய்த்துறை சார்பில்இணையவழி பட்டா பெற்றவர்களுக்குகூட சொத்து வரி மதிப்பீடு செய்வதில்லை என தெரிவித்தார். 43-வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ரேணுகா, "நிலைக்குழு தலைவர் (சுகாதாரம்), தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) ஆகியோருடன் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் ஆய்வு செய்தபோது, தனியார் சேகரித்துவரும்குப்பைகள், வகை பிரிக்காமலேயே கொட்டப்படுகிறது. அதனால் குப்பை அகற்றும் பணியை தனியாரிடம் வழங்கக்கூடாது" என்று வலியுறுத்தினார்.
» இ-சேவை மையங்களில் சேவை குறைபாடு புகார்: 44 தற்காலிக தரவு உள்ளீட்டாளர்கள் இடமாற்றம்
» அனைத்து கட்டண உயர்வும் வாபஸ்: பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு
மேயர் பிரியா பதில்: இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, புதிய ஆசிரியர் நியமனங்கள் விரைவில் நடைபெற உள்ளன. அப்போது வட சென்னையில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். புறம்போக்கு நிலங்களில் சொத்துவரி மதிப்பீடு செய்யக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
இணையவழி பட்டா பெற்றவர்களுக்கு ஒரு வாரத்தில் சொத்துவரி மதிப்பீடு செய்து தரப்படும். குப்பை சேகரிப்பு பணிமுறையாக செய்யாதது தொடர்பாக கவுன்சிலர் எனது கவனத்துக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். அதை விடுத்து மன்றத்தில் புகாராக தெரிவிப்பது நியாயமில்லை" என்றார்.
பின்னர், மாநகராட்சியின் 289 குப்பை அகற்றும் வாகனங்களில் ரூ.1 கோடியே 31 லட்சத்தில்ஜிபிஎஸ் கருவி பொருத்தி, ஜிஐஎஸ் தொழில் நுட்பத்தில் 3 ஆண்டுகளுக்கு கண்காணிக்கும் திட்டத்துக்கு மன்றக் கூட்டத்தில்அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநகராட்சியின் தண்டையார்பேட்டை, ராயபுரம், தேனாம்பேட்டை, ஆலந்தூர் ஆகிய 4 மண்டலங்களில் 16 இடங்களில் ரூ.26கோடியே 60 லட்சத்தில் நடைபயிற்சி பாதைகள் அமைக்க மன்றக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர பகுதியில் ரூ.9 கோடியே 45 லட்சம் செலவில் ஆண்டுக்கு 50 ஆயிரம் நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு செய்யும் திட்டத்துக்கும், நகரில் ரூ.8 கோடியே 46 லட்சம் செலவில் 81 இடங்களில் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்கவும் அனுமதி அளிப்பது உட்பட 53 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுக கூட்டணி வெளிநடப்பு: மாநகராட்சியில் பெரும்பாலான மண்டலங்களில் குப்பைகளை சேகரிப்பது, கொண்டு செல்வது போன்ற தூய்மைப் பணிகள் தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளன. இப்பணிகளை கண்காணிக்கும் பணிகளை தனியாரிடம் வழங்க இருதீர்மானங்கள் மற்றும் தண்டையார்பேட்டை, அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாரிடம் வழங்க ஆலோசனை வழங்கும் முகமையை தேர்வு செய்வது ஆகிய3 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.
இதை மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய திமுக கூட்டணி கட்சிகள் எதிர்த்தன. அதையும் மீறி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து 3 கட்சிகளையும் சேர்ந்த 9 கவுன்சிலர்களும் மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.