சென்னை: வரும் 2025-ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் உற்பத்திக்காக, ரூ.100 கோடி அனுமதித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதற்காகவும், கிராமப்புற மற்றும் நகர்ப் புறங்களில் வாழும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையிலும் பொங்கல் பண்டிகைக்காக இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், வரும் 2025-ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் உற்பத்திக்காக, ரூ.100கோடி அனுமதித்து முதல்வர்மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் மூலம், ஒரு கோடியே 77 லட்சத்து 64 ஆயிரத்து 476 சேலைகளும், ஒரு கோடியே 77 லட்சத்து 22 ஆயிரத்து 995 வேட்டிகளும் வழங்கப்படும்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2025-ம்ஆண்டில் பொங்கல் பண்டிகையின்போது, தேவைப்படும் வேட்டி மற்றும் சேலைகள் முழுவதையும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
தரம் பரிசோதித்து, தேவை பட்டியல் அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். வேட்டி சேலை வழங்கும்திட்டத்தை செயல்படுத்த ஒதுக்கீடுசெய்யப்பட்ட தொகையான ரூ.100கோடி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது. மேலும், இத்திட்டத்தின் முன்னேற்ற அறிக்கையின் அடிப்படையில் கோரப்படும் தொகை தகுந்தநேரத்தில் ஒப்பளிப்பு செய்யப்படும்.
பொதுமக்களுக்கு வேட்டி, சேலையை விநியோகிக்கும் நடைமுறையை முடிவு செய்ய ஏதுவாக, வருவாய்த் துறை முதன்மை செயலாளர் தலைமையில், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர், வருவாய்த் துறை நிர்வாகஆணையர் மற்றும் கைத்தறி இயக்குநர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கைரேகை கட்டாயம்: மேலும், வேட்டி சேலைகள்பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய, ரேஷன் கடைகளின்விற்பனை முனையத்தில் விரல்ரேகை பதிவு (Bio metric Authentication) கட்டாயமாக்கப்படுகிறது. இதனை தவறாது செயல்படுத்தஉரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது