மினி லாரி, டிராக்டர்களில் மட்டுமே விநாயகர் ஊர்வலம் - கன்னியாகுமரியில் கடும் கட்டுப்பாடு

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மினிலாரி, டிராக்டர்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் அமைப்பது மற்றும் கரைப்பது குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. அதன் பிறகு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் வருமாறு: "கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரி கடற்கரை, சொத்தவிளை கடற்கரை, சின்னவிளை கடற்கரை, சங்குத்துறை கடற்கரை, பள்ளிக்கொண்டான் அணைக்கட்டு, வெட்டுமடை கடற்கரை, மிடாலம் கடற்கரை, தேங்காய்ப்பட்டணம் கடற்கரை, திற்பரப்பு ஆறு, தாமிரபரணி ஆறு போன்ற இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகளை அமைக்க உத்தேசித்துள்ள அமைப்பாளர்கள் சிலை வைக்கப்படும் இடத்திற்கு தடையில்லா சான்று பெற்று உரிய படிவத்தில் தொடர்புடைய கோட்டாட்சியர்களுக்கு உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். சிலை வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் பொது நிலமாக இருந்தால் உள்ளாட்சி அமைப்புகளிடமும் நெடுஞ்சாலைத் துறையிடமும் தனியார் இடமாக இருந்தால் நிலஉரிமையாளர் களிடமும் தடையில்லா சான்று பெறப்பட வேண்டும். தற்காலிக கூடாரம் தீ பாதுகாப்பு தர நிலையை கடைபிடிப்பதாக உள்ளது என்பதற்கு தடையில்லா சான்று தீயணைப்பு துறையிடம் பெற வேண்டும்.

சிலை கரைக்கப்படும் 10 இடங்களிலும் போதிய தீயணைப்பு மீட்புப் பணி அலுவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருப்பதை மாவட்ட தீயணைப்பு அலுவலர் உறுதி செய்திட வேண்டும். தற்காலிக மின் இணைப்பு வழங்கப்படுவதற்கான ஆதாரம் குறிக்கும் கடிதம் மின்சாரத் துறையிடமிருந்து பெற வேண்டும். சிலையின் உயரம் அதன் பீடம் மற்றும் அடித்தளத்துடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மருத்துவமனைகள் கல்வி நிறுவனங்கள், பிற வழிபாட்டு தலங்கள் அருகில் சிலை வைப்பதை தவிர்க்க வேண்டும். தற்காலிக விநாயகர் சிலை வைக்கப்படுகின்ற இடத்தில் அரசியல் கட்சி அல்லது சாதி தலைவர்களின் விளம்பரப் பதாகைகள் வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

சிலை வைக்கப்படுகின்ற இடத்தில் 24 மணி நேரமும் தொடர்புடைய அமைப்பைச் சார்ந்த 2 தன்னார்வலர்கள் பாதுகாப்புக்காக இருக்க அந்தந்த அமைப்பு நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், போதிய மின்விளக்குகள், ஜெனரேட்டர் வசதி செய்யப்படவேண்டும். நான்கு சக்கர வாகனங்களான மினிலாரி, டிராக்டர் மட்டுமே சிலைகளை கரைக்க கொண்டு செல்லப் பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஊர்வலம் சிலைகள் கரைப்பதற்காக அறிவிக்கப்பட்ட இடத்துக்கு குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் (நண்பகல் 12 மணிக்கு முன்பு) கொண்டு செல்லப்பட வேண்டும்.

சிலை கரைப்புக்கான ஊர்வலம் காவல் துறையினர் வரையறுத்துக் கொடுத்த பாதை வழியாக மட்டுமே கொண்டு செல்லப்பட வேண்டும். சூரியன் மறைவதற்குள் (மாலை 6 மணிக்குள்) அனைத்து சிலைகளும் (விஜர்சனம்) கரைக்கப்பட வேண்டும்.
ஒலிபெருக்கி மற்றும் அனுமதிக்காக தடையில்லா சான்று தொடர்புடைய காவல் ஆய்வாளரிடமிருந்து உரிய அனுமதி பெற்று கூம்பு வடிவ ஒலிபெருக்கி அல்லாத பெட்டி வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும். அவ்வாறு வைக்கப்படும் பெட்டி வடிவ ஒலிபெருக்கிகள் ஒன்றுக்கு மேல் வைக்கக்கூடாது. மற்றும் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது.
பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தாத வகையில் குறிப்பிட்ட டெசிபல் அளவிற்குட்பட்ட பாக்ஸ் வடிவ ஒலிபெருக்கிகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும். விநாயகர் சிலைகள் ஏற்கெனவே வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுவ வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவேண்டும்.

எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கூடாரத்திலோ, சிலை அமைக்கும் இடத்திலோ இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சிலை வைக்கப்படுகின்ற பந்தலுக்குள் எளிதாக செல்லும் வகையில் உள்ளே செல்ல மற்றும் வெளியே வர விசாலமான பாதைகள் அமைக்கப்பட வேண்டும். கூரை அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். பொது அமைதி, பொதுமக்கள் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை ஆகியவற்றினை பாதுகாக்கும் நோக்கோடு வருவாய்த்துறை, காவல்துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளால் பிறப்பிக்கப்படும் இதர நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடு விதிகளை ஏற்பாட்டாளர்கள் கட்டாயமாக பின்பற்றப்படவேண்டும்.

சிலைகளை வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்குகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய மற்றும் நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்து சிலைகளின் தன்மைகளை ஆராய்ந்து அவை மாசுகட்டுப்பாட்டு வாரிய விதிகளுக்குட்பட்டிருப்பதை தொடர்புடைய அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும். மேலும், போக்கு வரத்திற்கு இடைஞ்சலாக பேருந்து நிறுத்தங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பிரச்சினைக்குரிய இடங்கள், மருத்துவமனைகள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் மற்றும் பாதுகாப்பற்ற இடங்களில் சிலை அமைத்தல் கூடாது. விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பக்தி பாடல்கள் மட்டுமே ஒலிக்கப்பட வேண்டும்.

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் சிலைகளை கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். அமைதியுடன் விநாயகர் சிலை ஊர்வலத்தினை நடத்திட அனைத்து தரப்பட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

கலந்தாலோசனை கூட்டத்தில் எஸ்பி-யான சுந்தரவதனம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் காளீஸ்வரி (நாகர்கோவில்), தமிழரசி (பத்மநாபபுரம்), உதவி காவல் கண்காணிப்பாளர் யாங்சென் டோமா பூட்டியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE