‘மந்தகதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்’ - நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் மந்தகதியில் நடைபெறும் பாதாளச் சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று இன்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

திருநெல்வேலி மாநகராட்சி கூட்டம் புதிதாக பொறுப்பேற்றுள்ள மேயர் கோ.ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் கே.ராஜூ, ஆணையர் சுகபுத்ரா முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர். தமிழ்த் தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கிய நிலையில் திருக்குறள் வாசித்ததும், முதல் தீர்மானம் நீங்கலாக அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப் படுவதாக, “ஆல் பாஸ்” என்று மேயர் தன்னிச்சையாக அறிவித்தார்.

ஆனால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டவரும் மேயர் தேர்தலில் ராம கிருஷ்ணனை எதிர்த்துப் போட்டியிட்டவருமான பவுல்ராஜ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். விவாதத்திற்குப் பின் தான் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அவரை இருக்கையில் அமரச் சொல்லி மேயர் வேண்டுகோள் விடுத்தபோதிலும் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் மேயரை நோக்கி கையை நீட்டி ஆக்ரோஷமாக அவர் பேசத் தொடங்கினார். இதனால் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படுவது போன்ற பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

“தங்கள் வார்டு பிரச்சினைகளை தங்களுக்கான நேரம் ஒதுக்கும்போது மட்டுமே பேச வேண்டும்” என மேயர் கூறிய பின்னரும், பவுல்ராஜ் பேச்சை நிறுத்தவில்லை. இதனால் அவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் சிலர் பேசினர். தீர்மானங்கள் குறித்து விவாதிக்காமல் நிறைவேற்றக் கூடாது என்று பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ் தெரிவித்தார். ஆனால், தீர்மானங்கள் குறித்த விவாதத்துக்கு மேயர் அனுமதிக்கவில்லை.

பின்னர் மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் என்று ஒவ்வொருவராக பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய அனைவருமே திருநெல்வேலி பாதாளச் சாக்கடை பிரச்சினை குறித்துப் பேசினர். பல்வேறு இடங்களில் பாதாளச் சாக்கடை பணிகள் மந்தகதியில் நடப்பதாகவும், பல இடங்களில் பாதாளச் சாக்கடை உடைப்பெடுத்து சுகாதார சீர்கேடு நிலவுவதால் பொதுமக்கள் சிரமப் படுவதாகவும், பாதாளச் சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இதற்கு பதிலளித்த ஆணையர், "பாதாளச் சாக்கடை பணிகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் பகுதிகள் என்று 18 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில் தனித்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது” என்றார்.

பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ் பேசும்போது, “பல இடங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவது சாத்தியமற்றது” என்று தெரிவித்தார்.

குடிநீர் பிரச்சினை தொடர்பான கேள்விகளுக்கு ஆணையர் பதில் அளிக்கும்போது, “அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. முறப்பநாடு கூட்டு குடிநீர் திட்டத்திற்கான நிலத்தை ஆர்ஜிதம் செய்து அளிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருடன் பேசவுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE