‘விழுப்புரம் அருங்காட்சியகத்தை வாடகைக் கட்டிடத்திலாவது தொடங்குங்கள்’ - அமைச்சரிடம் கோரிக்கை

By எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம்: விழுப்புரம் அருங்காட்சியகத்தை வாடகைக் கட்டிடத்திலாவது தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அருங்காட்சியகம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், எழுத்தாளர் செங்குட்டுவன், சென்னை தலைமைச் செயலகத்தில், தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை இன்று சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: "2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் “ரூ.5 கோடி மதிப்பீட்டில் விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என்ற அறிவிப்பு வெளியானது. இதனைத்தொடர்ந்து, விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பெருந்திட்ட வளாகத்தில், ஊரக வளர்ச்சித் துறைக்குச் சொந்தமான 2 ஆயிரம் சதுர மீட்டர் நிலத்தில் ரூ.5 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான நிர்வாக அனுமதி வழங்கி 04.08.2022-ல் அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால், திட்டமிட்டபடி அந்த இடத்தில் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அருங்காட்சியகம் அமைக்க 2 ஏக்கர் நிலம் தேவை எனும் புதிய கோரிக்கை தமிழக அரசின் அருங்காட்சியகங்கள் துறை இயக்குநரிடமிருந்து 26.07.2023-ல் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் முன் வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் கோலியனூரை அடுத்துள்ள பனங்குப்பம் கிராமத்திலுள்ள நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சுமார் ஒன்றரை ஏக்கர் நிலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அருங்காட்சியகத்துக்காக பரிந்துரைக்கப்பட்டது.

இந்த இடத்தை அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் அரவிந்த் 6.08.2023-ல் நேரில் ஆய்வும் செய்தார். இந்த இடத்தில் அரசு அருங்காட்சியகம் அமைத்திட சென்னை அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் பெயருக்கு நிலமாற்றம் செய்யலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கடந்த 04.11.2023-ல் நில நிர்வாக ஆணையருக்குப் பரிந்துரை செய்தார்.

ஆனாலும் இதுநாள் வரை விழுப்புரம் அருங்காட்சியகப் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. அறிவிப்பு வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நிரந்தர அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகளை விரைந்து தொடங்குவதற்கு தாங்கள் ஆவண செய்ய வேண்டுகிறேன்.

நிரந்தர அருங்காட்சியகப் பணிகள் தொடங்கி முடிக்கப்பெறும் வரை விழுப்புரம் நகருக்குள் அரசு அல்லது நகராட்சிக்குச் சொந்தமான வாடகைக் கட்டிடம் ஒன்றில் தற்காலிக அருங்காட்சியகத்தைத் தொடங்கி இயங்கச் செய்யலாம். ஏனெனில் தமிழ்நாட்டில் கடலூர் உள்ளிட்ட பெரும்பாலான அரசு அருங்காட்சியகங்கள் வாடகைக் கட்டிடங்களில்தான் தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது" என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE