இன்று தமிழக பட்ஜெட் 2024 தாக்கல்... இடம் பெறுகிறது மாபெரும் ஏழு தமிழ் கனவுகள்!

By காமதேனு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கையில் மாபெரும் ஏழு தமிழ் கனவுகள் என்ற தலைப்பில் திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது.

தங்கம் தென்னரசு

நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 2024 - 25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். இதற்காக 'தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கி' எனும் தலைப்பில் முத்திரை சின்னத்தை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

இன்று தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கையில் ஏழு முக்கிய அம்சங்கள் இடம் பெற உள்ளன என்று தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாபெரும் ஏழு தமிழ் கனவுகள் இதில் இடம் பெறுகிறது.

சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய சமூகம், அறிவு சார்ந்த பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம் தாய் தமிழும், தமிழர் பண்பாடும் ஆகிய தலைப்புகளில் முக்கிய அம்சங்கள் இடம் பெற உள்ளன. இன்று தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் மேலும் பல முக்கிய அம்சங்கள், அறிவிப்புகள் இடம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை

தமிழ்நாடு மக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் ஏழை, எளியவர்களின் நலன் சார்ந்த திட்டங்களை கொண்ட அறிவிப்புகள் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் புதிய திட்டங்களும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும்.

குறிப்பாக, வெளிமாவட்டங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் குறித்த அறிவிப்புகள் இடம் பெறக்கூடும். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கூடுதல் நிதி உதவி மற்றும் சலுகைகள், சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு, சாலை கட்டமைப்புகளை மேம்படுத்துவது, புதிய மேம்பாலம் உள்ளிட்ட அறிவிப்புகளும் இடம் பெறும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE