சீமான் மீது வழக்கு: காவல்துறைக்கு எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு! 

By KU BUREAU

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை பயன்படுத்தியதற்காக சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை செய்துள்ளது.

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பரப்புரையின் போது, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியை சண்டாளன் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தி இழிவுபடுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் பாடல் பாடிய விவகாரம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குற்றாலத்தில் வைத்து சாட்டை துரைமுருகன் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சாட்டை துரைமுருகன் கைதை விமர்சனம் செய்த நாதக தலைவர் சீமான், “நானும் அதே வார்த்தையை கூடுகிறேன். முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள். அந்தப் பாடலை எழுதியது வேறு யாரோ.. அவர்கள் எழுதியதையே நாங்கள் பாடினோம்" என்று ஆவேசமாகக் கூறினார்.

இதற்காக சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஜேஷ் என்பவர் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து, அவர் மாநில எஸ்சி, எஸ்டி ஆணையத்தை நாடினார்.

இந்த நிலையில் சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக சீமான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பட்டாபிராம் காவல் நிலையத்திற்கு எஸ்சி, எஸ்டி ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE