இந்தியாவில் 2,200 கோடி தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகிறது - பெருமாநல்லூர் தென்னை கருத்தரங்கில் தகவல்

By இரா.கார்த்திகேயன்

அவிநாசி: உலகின் மொத்த தேங்காய் உற்பத்தியில் 30 சதவீத தேங்காய்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதாக பெருமாநல்லூரில் நடந்த தென்னை கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் திருவனந்தபுரம், மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் காசர்கோடு இணைந்து திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் இன்று தென்னை மற்றும் கிழங்கு பயிர்கள் சார்ந்த வேளாண் உணவு அமைப்புகள், மீள் தன்மை மற்றும் நிலையான வருமானம் ஈட்டுதலுக்கான தொழில் நுட்பம் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

இதில் திருவனந்தபுரம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் இயக்குநர் ஜி.பைஜூ தலைமை வகித்து பேசியதாவது: "மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதற்கேற்ப உணவு உற்பத்தியை நாம் அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். சுதந்திர காலக் கட்டத்தில் இருந்த விளை நிலம் தான், இன்றைக்கும் நமக்கு உள்ளது. அதனை வைத்து புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ளது.

மண், கால நிலை, தண்ணீர் உள்ளிட்ட அனைத்தும் தென்னை உற்பத்தியை சார்ந்துள்ளது. திருப்பூர், கோவை மற்றும் கேரளா என ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு சூழல் உள்ளது. சூழலுக்கு ஏற்பத்தான் சாகுபடி செய்யப்படுகிறது. பருவ நிலை மாற்றம் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும். இன்றைக்கு, தென்னையினூடே ஊடு பயிராக கிழங்குகள் பயிரிடப்பட்டு, அறுவடை செய்துள்ளனர்.

சுதந்திரத்தின் போது 50 டன் உணவு உற்பத்தி செய்தோம். இன்றைக்கு 6 மடங்கு அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து 330 மில்லியன் டன் உணவு உற்பத்தி செய்கிறோம். புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் மூலமே இது சாத்தியமாகி உள்ளது. நாளுக்கு நாள் விளை நிலத்தின் பரப்பு குறைந்தாலும், புதிய தொழில் நுட்பங்களை கொண்டு சாகுபடியில் இலக்கை எட்டி வருகிறோம். சுதந்திரத்தின் போது 32 கோடி தேங்காய்களை அறுவடை செய்தோம்.

இன்றைக்கு 2,200 கோடி தேங்காய்களை விவசாயிகள் உற்பத்தி செய்கிறார்கள். உலக உற்பத்தியில் 30 சதவீதம் தேங்காய்களை இந்தியா உற்பத்தி செய்து வருகிறது. அந்த உற்பத்தித்திறனை மேலும் மேம்படுத்தவே இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்துகிறோம். தேங்காய் உற்பத்தியில் இந்தோனேஷியா போன்ற போட்டி நாடுகள் இருந்தாலும், இந்தியா இன்னும் உற்பத்தி திறனை மேம்படுத்தினால் 3 அல்லது 4 மடங்கு உற்பத்தியை அதிகரிக்கலாம்" என்று இயக்குநர் ஜி.பைஜூ கூறினார்.

தென்னை வளர்ச்சி வாரியம் மண்டல இயக்குநர் அறவாழி பேசியதாவது: "தென்னை வளர்ச்சி வாரியம் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 70 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை உற்பத்தி செய்கிறோம். தென்னையின் வேர், காய், கனி என அனைத்தும் பயன்படுவதால் அதை கற்பக விருட்சம் என்று அழைக்கிறோம். இன்றைக்கு உணவு மூலம் ஏற்படும் ஒரு நோயாக புற்றுநோய் இருந்து வருகிறது. இதற்கு அருமருந்து தேங்காய் எண்ணெயில் உள்ளது" என்று அறவாழி கூறினார்.

இந்தக் கருத்தரங்கில், தென்னை ஆராய்ச்சி விஞ்ஞானிகள், வேளாண்மைத் துறை, தோட்டகலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தென்னை வளர்ச்சி தொடர்பான கையேடுகள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றுவது தொடர்பான புத்தகங்களும் இந்தக் கருத்தரங்கில் வெளியிடப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE