எந்த சமயத்தையும் சார்ந்தவர் அல்ல திருவள்ளுவர்: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் புகழாரம்

By KU BUREAU

சென்னை: திருவள்ளுவர் எந்த சமயத்தையும் சார்ந்தவர் அல்ல என்றும், அவர் வழியில் நின்று நீதிபரிபாலனத்தை அறத்துடன் மேற்கொள்ள வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்தார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான 10 பங்களாக்கள், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பழைய சட்டக்கல்லூரி அருகே 5 மாடிகளுடன் புதிதாக நீதிமன்ற கட்டிடம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் கீழமை நீதிமன்ற ஊழியர்களுக்கான உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நிவாரண நிதி திட்ட தொடக்க விழா ஆகியவை சென்னை உயர் நீதிமன்ற கலையரங்கில் நேற்று நடைபெற்றது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா தலைமை வகித்தார்.

விழாவில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது: நீதித்துறைக்காக கட்டப்படும் பிரம்மாண்ட கட்டிடத்தின் மதிப்பு வழக்கறிஞர்கள், நீதித்துறை ஊழியர்கள், நீதிபதிகளின் ஒட்டுமொத்த செயல்பாட்டில்தான் உள்ளது. நீதித்துறையைப் பொருத்தமட்டில் குற்ற வழக்குகள் குறைக்கப்பட வேண்டும். உரிமையியல் வழக்குகள் அதிகரிக்க வேண்டும்.

நீதித்துறையுடன், நீதிமன்ற ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் தான் நீதிமன்ற பணிகள் செம்மையாக நடைபெறும். இதற்கு நிவாரண நிதி வாயிலாக வழிவகுத்து கொடுத்துள்ள தலைமை நீதிபதி, தமிழக அரசு உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

இதன்மூலம் சுமார் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பலன் பெறுவர் என்பது பாராட்டுக்குரியது. மூத்த நீதிபதி ஆர்.மகாதேவன் எப்போதும் எனக்கு வள்ளுவர் சிலையைத்தான் பரிசாக கொடுப்பார். தமிழ் மொழியில் இல்லாத நீதி நூல்களே கிடையாது. அதனால் நீதியின் மொழி என்றாலே தமிழ் தான். அதனால் தான் வள்ளுவன் சீர்தூக்கி என்ற குறளை எழுதியுள்ளான்.

திருவள்ளுவர் எந்த மதத்தையோ, எந்த சமயத்தையோ சார்ந்தவர் அல்ல. அவர் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எந்தவொரு மதத்தையும் குறிப்பிடவில்லை. ஆனால், நீதி பரிபாலனம் குறித்து கூறும்போது இறைபுரிந்து என்கிறார். எனவே அவர் வழியில் நின்று நீதிபரிபாலனத்தை அறத்துடன் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பேசிய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஆர். மகாதேவனுக்கு, விழா மேடையிலேயே அதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளதாகக் கூறி வாழ்த்து தெரிவித்தார்.

நீதிபதி டி.கிருஷ்ணகுமார் தனது உரையில், “மாவட்ட நீதிமன்ற ஊழியர்களுக்காக புதிதாக தொடங்கப்பட்டுள்ள தலைமை நீதிபதியின் நிவாரண நிதி திட்டம் மூலமாக அனைத்து ஊழியர்களும் தங்களது ஆண்டு பங்களிப்பு நிதியாக ரூ.100 செலுத்த வேண்டும்.

அதன் பிறகு குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப்பிறகு ரூ.200 செலுத்த வேண்டும். இதன்மூலம் பணியின்போது உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை நிவாரண உதவித்தொகை வழங்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE