தெலங்கானா தேர்தல் நடவடிக்கைகளில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், போதைப்பொருள், தங்கம், வெள்ளி, மதுபானங்கள் மற்றும் அன்பளிப்புகள் மொத்த மதிப்பு ₹518 கோடியைத் தாண்டியுள்ளது.
தெலங்கானாவில் இந்த மாதம் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அக்டோபர் 9ம் தேதி முதல் நடத்தை விதிகள் அந்த மாநிலத்தில் அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன.
தெலங்கானாவை பொறுத்தவரை, கடந்த 2018ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காலகட்டத்தில் 103 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தத் தேர்தலில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பத்து நாட்களுக்குள், தெலங்கானா போலீஸார் மாநிலம் முழுவதும் சுமார் ரூ.243 கோடி மதிப்பிலான பல்வேறு பொருட்களையும் கைப்பற்றினர்.
தெலங்கானா காவல்துறை, 373 பறக்கும் படைகள், 374 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 95 மாநில உள் எல்லை சோதனைச் சாவடிகளில் பணம் மற்றும் பிற பொருட்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.
இதுதவிர, 24 மணி நேரமும் சிறப்பு மொபைல் பார்ட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவர்கள் மூலம் தையல் இயந்திரங்கள், குக்கர், சேலைகள், கடிகாரங்கள், ஹெல்மெட்கள், மொபைல்கள், மதிய உணவுப் பெட்டிகள் மற்றும் பிற சமையல் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் இதுவரை ₹177 கோடி பணம், ₹178 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் ₹66 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், ₹30 கோடி மதிப்புள்ள மருந்துகள், ₹66 கோடி மதிப்புள்ள அன்பளிப்பு பொருட்கள் என இதுவரை மொத்தம் ₹518 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.