சாலையோரம் நீண்ட நாளாக நிறுத்தியுள்ள வாகனங்கள் குறித்து ‘1913’-ல் புகார் அளிக்கலாம்: மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

By KU BUREAU

சென்னை: சென்னை மாநகரப் பகுதிகளில் சாலையோரம் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் குறித்து மாநகராட்சி எக்ஸ் தளத்திலும், ‘1913’ என்ற எண்ணிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்தது. அப்போது, சாலையோரங்களில் கேட்பாரற்று கிடக்கும் பழைய வாகனங்களில் தேங்கும் நீரிலிருந்து டெங்கு பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சாலையோரம் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை அகற்றுமாறு, சென்னை மாநகராட்சி ஆணையராக அப்போதிருந்த தா.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

அதன்படி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அகற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. அந்த தொகையில் மாநகரில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

அதன்பிறகு, மீண்டும் சாலையோரம் வாகனங்களை நிறுத்துவது அதிகரித்தது. தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டு அத்தகைய வாகனங்களை அப்புறப்படுத்தியது. இந்நிலையில், இதுபோன்ற வாகனங்களை அகற்றி ஏலம் விடப்படும் என்று மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மாநகராட்சி மன்றத்தில் அறிவித்திருந்தார்.

3 ஆயிரம் வாகனங்கள்: அதைத்தொடர்ந்து, கேட்பாரற்றுக் கிடக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அகற்றப்பட்டுள்ளன. அவற்றை ஏலம் விட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்கு தடையில்லா சான்று வழங்குமாறு மாநகர காவல்துறையிடம் கோரியுள்ளது. மாநகர காவல்துறையும், இந்த வாகனங்கள் வழக்குகளில் தொடர்புடையவையா? என ஆய்வு செய்து வருகிறது.

இருப்பினும், மாநகரில் பல இடங்களில் சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் அகற்றப்படாமல் இருப்பதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறும்போது, “சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக, மாநகராட்சியின் @chennaicorp என்ற எக்ஸ் தளம் மற்றும் மாநகராட்சியின் புகார் தொலைபேசி எண்ணான ‘1913’-ல் தொடர்புகொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE