‘அதிகாரம் மட்டும் கைக்கு வரட்டும்!’ - ஆக்ரோஷ ஆக்‌ஷன் பயிற்சியில் சீமான்

By சானா

அப்போதுதான் ராணுவப் பயிற்சியைத் தொடங்கியிருந்தார் செந்தமிழன் சீமான். ‘ராம்போ’ முதல் ‘விக்ரம்’ வரையிலான ஆக்‌ஷன் படங்களின் ஆக்ரோஷக் காட்சிகள் திரையில் ஓடிக்கொண்டிருக்க, ‘பிகே-47’ (!) துப்பாக்கியைப் பிடித்தவாறு ‘வடகிழக்கு’ திசையை நோக்கி வெறியுடன் குறிபார்த்துக்கொண்டிருந்தார்.

நம்பிக்கையை (இன்னமும்) கைவிடாத ‘நாம் தமிழர்’ தம்பிகள் கைகளை மடக்கி துப்பாக்கியாகப் பாவித்து அவர் திரும்பும் பக்கமெல்லாம் திரும்பியபடி, ‘டுஷ்க்யாம்’, ‘டுஷ்க்யாம்’ என வாயிலேயே ரவை சுட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு தம்பி ‘கறி இட்லி’யைக் கையெறி குண்டாகப் பாவித்து கதவு மீது எறிந்து கடும் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார்.

அந்த நேரம் பார்த்து, சீமானிடம் செய்தியாளர் சந்திப்பு நடத்தவந்திருந்த ஊடகவியலாளர்கள் ஒருவித உதறலுடன் நின்றுகொண்டிருந்தனர். மணிக்கணக்கில் நின்ற பின்னர் துணிச்சலை வரவழைத்துக்கொண்ட ஒரு பெண் ஊடகவியலாளர், “மணிப்பூருக்குப் போக ரெடியாகிட்டீங்க போல… சென்னையில இருந்து ஆறு மணி நேரத்துல அங்கே போயிடலாம். அதுக்கு அடுத்த அரை மணி நேரத்துல கலவரத்தையெல்லாம் கட்டுப்படுத்திடுவீங்கதானே?” என்று கேட்டார்.

‘ம்ஹூஹூம்’ எனச் சின்னதாகப் புன்னகைத்த சீமான், “அது இப்ப இல்லை… இப்ப இல்லை ‘தம்பி’! அதிகாரம் என் கைக்கு வந்த பின்னாடிதான் அந்த அதகளமெல்லாம்! தமிழ் நிலம் மட்டுமில்ல, சீன எல்லை நிலமும் சீமான் கையில சிக்கும். அப்ப பாருங்க அண்ணனோட அதிரடியை…” என்று வாயைக் குவித்து வலது முஷ்டியை உயர்த்தினார். அதுவரை அரண்டுபோயிருந்த செய்தியாளர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்து அந்த இடமே இலகுவானது.

“அப்படீன்னா… எதுக்கு இந்த ஜம்பிங்கு... ட்ரெய்னிங்கு எல்லாம்?” என்று இன்னொருவர் கேட்க, “நாளைக்கு நாமக்கல்ல ஒரு பொதுக்கூட்டம் இருக்குல்ல. அதுக்கு உத்வேகமா உரை வீச்சு நிகழ்த்த இது ஒரு பயிற்சி. எலக்‌ஷனோ... கலெக்‌ஷனோ(!) வென்றால் மகிழ்ச்சி. தோற்றால் பயிற்சி” என்று சிரித்தார் சீமான்.

“எப்பவுமே தோக்குறதுனால்தான் இப்படியெல்லாம் பயிற்சி எடுக்குறீங்க போல...” என்று முணுமுணுத்த இன்னொரு ஊடகவியலாளர், “மெரினா பீச்ல இருக்கிற நினைவிடத்தையெல்லாம் தகர்க்கப்போறதா சொல்லியிருக்கீங்க… அப்புறம் நீங்களும் நடிகர் விஜய்யும் சேர்ந்துட்டா எல்லாரையும் அடிச்சு சாய்ச்சுடுவீங்கன்னும் சொல்லியிருக்கீங்க. ரெண்டு பேரும் சேர்ந்து யோகி மாதிரி ‘புல்டோசர்’ ஆட்சியைக் கொண்டுவருவீங்களா?” என்று கேட்டதும், “அதான் சொன்னேனே…. அதிகாரம் கைக்கு வரணும். அதுக்கு நீங்கள்லாம்தான் துணைநிக்கணும்” என்று அன்புக்கட்டளையிட்டார் சீமான்.

“எங்களுக்கு அடுத்த பிரஸ் மீட் இருக்குண்ணா” என்று ஊடகவியலாளர்கள் உத்தரவு வாங்கிக்கொண்டனர்.

* * *

அடுத்து அதிமுக அலுவலகம்

கோடிக்கணக்கில் (!) தொண்டர்கள் சேர்ந்தபடியால், கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ‘இனி என்ன ஆனாலும் பார்த்துடலாம்’ எனும் முகபாவனையுடன் இடுப்பில் கைவைத்தபடி நின்றிருந்தார் எடப்பாடி பழனிசாமி. “இருந்தாலும் தலைவருக்கு இவ்வளவு துணிச்சல் கூடாது. ‘பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கப்போறதில்லை’ன்னு பொத்தாம்பொதுவாச் சொல்லியிருந்தாகூட பரவாயில்லை. பழைய தேர்தல் அறிக்கையிலேயே பட்டவர்த்தனமா சொல்லிட்டோம்னு வச்சாரு பாருங்க ஒரு பஞ்ச். செம்மல்ல!” என்று செம்மலை உள்ளிட்ட தலைவர்கள் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“அண்ணாமலைகூட சகவாசம் வச்சுக்கிட்டா அண்ணன் ஆக்‌ஷன் எடுத்துடுவார் போலன்னு ஆளாளுக்குப் பேச ஆரம்பிச்சுட்டாங் களே… ஈபிஎஸ் போடுற பால்ல ஐபிஎஸ் இன்னிங்ஸே ஆடிப் போய்டும் போல இருக்கே” என்று புதிதாகச் சேர்ந்த இள (ரத்தத்தின்) ரத்தங்கள் பூரிப்புடன் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.

“எல்லாம் மதுரையில மாநாடு போடுற மகிமைதான். வீரம் விளைஞ்ச மண்ணுன்னா சும்மாவா!” என்று மாட்டுத் தாவணியிலிருந்து பஸ் பிடித்துவந்திருந்த பாசக்காரத் தொண்டர்கள் பேசிக்கொண்டனர்.

திடீரென ஒரு தொண்டரின் செல்போன் அலறியது. எடுத்துப் பேசிய தொண்டர், “என்னது எடப்பாடிக்கே ‘ஈ.டி’யா???” என்று அதைவிடவும் சத்தமாக அலறினார்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE