அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு

By KU BUREAU

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுமீதான விசாரணையை உயர் நீதிமன்றம் அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்தனர். இந்தவழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய வழக்கு நிலுவையில் இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும், இந்தவழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த வழக்கு ஏற்கெனவே பலமுறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது' என்றனர். அதற்கு மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், இந்த வழக்கில் விரிவாக வாதிட வேண்டியுள்ளது என்றார்.

அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோர் இந்த வழக்கில் தங்களது தரப்பு வாதத்தை முன்வைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

அவகாசம் கோரக்கூடாது: அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் மேலும் அவகாசம் கோரக்கூடாது என செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தி, விசாரணையை வரும் செப்.4-க்குதள்ளிவைத்துள்ளனர்.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வரும் செப்.3 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE