எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என கோவை செல்வபுரத்தில் நடந்த தெருமுனைப் பிரச்சாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி, அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் விந்தியா ஆகியோர் பேசினர். கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ”ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை அனைத்து பெண்களுக்கும் கொடுக்கப்படவில்லை. எடப்பாடியார் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, போராடிய பின்னர்தான் பாதி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்பட்டது. உரிமைத் தொகை தற்போது வாங்குபவர்களுக்கு அதை நிறுத்தி விட முடியாது. எடப்பாடியார் ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் உரிமை தொகை வழங்கப்படும்” என்றார்.
மேலும், “மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களிடம் கூட்டத்திற்கு வரவில்லை என்றால் பணம் நிறுத்தி விடுவோம் என்று திமுகவினர் சொல்வார்கள். அப்படியெல்லாம் பணத்தை நிறுத்த முடியாது. அப்படியெல்லாம் நாங்கள் விட்டு விட மாட்டோம். கோவைக்கு திமுக அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அதிமுக அரசில் துவங்கப்பட்ட வீடுகள் கட்டுமானத்தை கூட அவர்கள் முடிக்கவில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,” திமுக கூட்டணியில் 38 எம்.பி.,க்கள் இருந்தும் தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. சிறுவானி அணையில் கேரள அரசு தண்ணீரை குறைத்துவிட்டது. ஆனாலும் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார்.