கோடை மழையால் சேதம்: பயிர் பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு தொடக்கம்

By KU BUREAU

சென்னை: தமிழகத்தில் கோடை மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டது குறித்து கணக்கெடுக்கும் பணியை வருவாய், வேளாண் துறைகள் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், டெல்டாவில் மிதமானது முதல் அதிகனமழை வரை பெய்து வருகிறது.

விவசாயிகளின் கோரிக்கை: இதன் காரணமாக, டெல்டா உள்ளிட்ட சில மாவட்டங்களில் பயிரிடப்பட்ட நெல், பருத்தி, எள் உள்ளிட்ட பயிர்கள் மழை நீரில் மூழ்கி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து, பயிர் பாதிப்புகள் குறித்து வருவாய் மற்றும் வேளாண் துறையினர் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் பயிர் பாதிப்பு குறித்து மாவட்ட அளவிலான வேளாண் அதிகாரிகள் தலைமையில் ஆய்வு நடந்து வருகிறது.

ஜூன் 4-க்கு பிறகு அறிவிப்பு: பயிர் பாதிப்பு தொடர்பான அறிக்கையை அதிகாரிகள் விரைவில் அரசிடம் சமர்ப்பிப்பார்கள் என்று தெரிகிறது. ஜூன் 4-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து, நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்ட பிறகு, பயிர் பாதிப்புக்கான இழப்பீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE