‘ரூ.3.98 கோடிக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை’ - நீதிமன்றத்தில் கேசவவிநாயகம் மனு

By KU BUREAU

சென்னை: ‘நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்கள் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு சென்ற ரூ.3.98 கோடிக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம் தெரிவித்துள்ளதோடு, இதுதொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஏப்.6-ம் தேதி இரவு 8.30 மணியளவில் தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான சென்னை புரசைவாக்கம் ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் பணிபுரியும் சதீஷ், பெருமாள், நவீன் ஆகியோரிடமிருந்து ரூ.3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500-ஐ தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக தாம்பரம் போலீஸார் பதிவு செய்த வழக்கு பின்னர் சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. நெல்லை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் தங்களிடம் வழங்கப்பட்டது என கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழக மக்களவைத் தேர்தல் பொறுப்பாளர் கே.கேசவவிநாயகம், இதுதொடர்பாக மே 21-ம் தேதி சிபிசிஐடி போலீஸார் முன்பாக ஆஜராகி விளக்கமளிக்க போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்மனை எதிர்த்தும், பணம் பறிமுதல் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கேசவவிநாயகம் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.3.98 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. போலீஸார் அரசியல் உள்நோக்கத்துடன் எந்தக் காரணமும் தெரிவிக்காமல் விசாரணைக்கு ஆஜராகும்படி எனக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

நான் தமிழக மக்களவைத் தேர்தல் பொறுப்பாளர் மட்டுமின்றி பிற மாநில தேர்தல் மேற்பார்வையாளராகவும் பணியாற்றி வருவதால் ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு விசாரணைக்கு ஆஜராவதாக தெரிவித்துள்ளேன். பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக்கும், சம்மனுக்கும் தடைவிதித்து, வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என கோரியுள்ளார். இந்த மனு உயர் நீதிமன்ற விடுமுறைகால அமர்வில் நீதிபதி சி.சரவணன் முன்பாக இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE