சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதியின் எம்.பி.யுமான கவுதம சிகாமணி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 2006-2011-ம் ஆண்டுகளில், தமிழக அரசின் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012-ல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூலை மாதம் சோதனை நடத்தினர்.
சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனைகளைத் தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி, சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
இந்தச் சூழ்நிலையில், இந்த சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக, அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி, கே.எஸ். ராஜமகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே. சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ் பிஸ்னஸ் கவுஸ் நிறுவனம் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் ஆகஸ்ட் மாதம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகை எண்ணிடப்பட்டு, கோப்புக்கு எடுத்த முதன்மை அமர்வு நீதிபதி , இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதனையடுத்து இந்த வழக்கு இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதம சிகாமணி எம்.பி உள்ளிட்ட ஆறு பேரும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பிய நீதிபதி விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்