தஞ்சையில் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்த அதிமுகவினரை தடுத்த 2 போலீஸார் காயம்

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை அவதூறாகப் பேசியதாக, தஞ்சை அதிமுகவினர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவப் பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர், தலைமை தபால் நிலையம் முன்பு அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு தஞ்சை மத்திய மாவட்ட அதிமுக செயலாளர் மா.சேகர் தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் என்.எஸ்.சரவணன், பகுதிச் செயலாளர் பி.பஞ்சாபிகேசன், வி.புண்ணியமூர்த்தி, மனோகரன், சதீஷ், கொள்கைபரப்பு துணைச் செயலாளர் துரை.திருஞானம், அமைப்புச் செயலாளர் காந்தி, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மத்திய மாவட்டச் செயலாளர் நடராஜன், மாவட்ட பிரதிநிதி தன.விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று, அண்ணாமலையைக் கண்டித்து, கண்டன முழக்கமிட்டபடி, அவரது உருவப் பொம்மையை எரிக்க முயன்றனர்.

இதனையறிந்த பாதுகாப்புக்கு வந்திருந்த கிழக்கு காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து உருவ பொம்மை பறிக்க முயன்றனர். அப்போது போலீஸாருக்கும், அதிமுகவினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் நாகராணி, சோழராஜன் ஆகிய இருவருக்கும் கையில் ரத்தக் காயம் ஏற்பட்டது. இதனையறிந்த மற்ற போலீஸார், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

பின்னர், அதிமுகவினர், அண்ணாமலை உருவப் பொம்மையையும், உருவப் படத்தையும் காலணி அடித்து, தீயிட்டு கொளுத்தினர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE