அரசுப் பள்ளியில் வகுப்பறை மேற்கூரை சிமென்ட் பூச்சு விழுந்ததில் 3 மாணவர்கள் காயம் @ ஊத்தங்கரை

By KU BUREAU

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பெரிய தள்ளப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரையின் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில், 3 மாணவர்கள் காயமடைந்தனர்.

இப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடம் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது. இந்த வகுப்பறையை பிளஸ் 1 மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த வகுப்பறையில் நேற்று வழக்கம் போல மாணவர்கள் அமர்ந்து இருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக வகுப்பறையின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து மாணவர்களின் தலையில் விழுந்தது. இதில், மாணவர்கள் சந்தோஷ், வெங்கடேஷ், மணிகண்டன் ஆகியோருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இதில் காயம் அடைந்த மாணவர்.

உடனடியாக அவர்களை ஆசிரியர்கள் மீட்டு, சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்குத் தலையில் தையல் போட்டு சிகிச்சை அளித்து பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே, தகவல் அறிந்து பள்ளி வளாகத்தில் திரண்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், “தரமற்ற வகுப்பறை கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறி ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களைச் சமாதானம் செய்த ஆசிரியர்கள், உயர் அதிகாரிகளிடம் இது குறித்து தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பின்னர் மாணவர்களின் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE