தஞ்சாவூர் புதை சாக்கடையில் இருந்து வழிந்தோடும் கழிவு நீர்: சீர் செய்யக்கோரி சாலை மறியல் 

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர், விளார் பிரதானச் சாலை, லாயம் பகுதியில் புதை சாக்கடையில் இருந்து வழிந்தோடும் கழிவு நீரை வெளியேறாதவாறு சீரமைக்க வலியுறுத்தி 1 மணி நேரம் அரசுப் பேருந்தை மறித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

லாயம் சாலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தச் சாலையில் உள்ள 3-க்கும் மேற்பட்ட புதை சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் வழிந்தோடி வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அந்தச் சாலை வழியாகச் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர், வேலைக்குச் செல்வோர் என அனைவரும் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகராட்சி 35-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எம்.வைஜெயந்திமாலா தலைமையில் முன்னாள் உறுப்பினர் த.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.குருசாமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் இ.வசந்தி, மாநகரச் செயலாளர் எம். வடிவேல் மற்றும் அந்தப்பகுதி பொதுமக்கள் இன்று காலையில் திரண்டு, விளார் பிரதானச் சாலை, லாயம் பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தச் சாலையில், கொல்லாங்கரையில் இருந்து தஞ்சாவூரை நோக்கி வந்த அரசுப் பேருந்தை மறித்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டதைத் தொடர்ந்தனர். இதையடுத்து தகவலறிந்த, மேயர் சண்.ராமநாதன் மற்றும் மாநகராட்சி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் உடனடியாக சாக்காடை கசிவு சீர் செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதனால் அந்தச் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதை சாக்கடையில் இருந்து கழிவு நீர் வழிந்தோடுவதை மேயரும் அதிகாரிகளும் சொன்னபடி சீர்செய்யாவிட்டால் மீண்டும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE