மு.க.அழகிரி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு.... திமுகவில் பரபரப்பு!

By காமதேனு

தேர்தல் பிரசாரத்தின் போது, தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 21 பேர் மீது தொடரப்பட்ட வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

மு.க.அழகிரி

கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது மதுரை மாவட்டம் மேலூர் உதவி தேர்தல் அதிகாரியாக இருந்த அப்போதைய தாசில்தார் மு. காளிமுத்து மீது தாக்குதல் நடத்திய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரான மு.க.அழகிரி மற்றும் திமுக நிர்வாகிகள் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மு.க.அழகிரி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒரு கோயிலில் மு.க.அழகிரி மற்ற திமுக தொண்டர்களுடன் கூடி திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரியதாக கூறப்படுகிறது. அதை தாசில்தார், வீடியோகிராபர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, நிகழ்ச்சியை வீடியோ எடுக்கத் தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் தாசில்தாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் திமுக நிர்வாகிகள் என மொத்தம் 21 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 9-ம் தேதி மு.க.அழகிரி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். இந்த நிலையில், நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால் திமுகவினரிடையே பரபரப்பான சூழல் நிலவுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE