அவதூறு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் பழனிசாமி ஆஜர்: 70 வயதானதால் விலக்கு கோரி நீதிபதியிடம் மனு

By KU BUREAU

சென்னை: திமுக எம்.பி. தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். அப்போது தனக்கு 70 வயதாகிவிட்டதாலும், உடல்நலக் குறைவு காரணமாகவும் வழக்கில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டுமென அவர் கோரினார்.

கடந்த ஏப்.15 அன்று சென்னை புரசைவாக்கம் பகுதியில் நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பழனிசாமி பேசினார். அப்போது மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளரான தயாநிதி மாறன், தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 75 சதவீதத்தை தொகுதிக்கு செலவு செய்யவில்லை என குற்றம்சாட்டி விமர்சித்து பேசியிருந்தார்.

இதையடுத்து பழனிசாமிக்கு எதிராக தயாநிதிமாறன் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தேர்தல் நேரத்தில் பழனிசாமி எனக்கு எதிராக சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் துளி கூட உண்மை இல்லை. தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.17 கோடியில் ரூ.17 லட்சம்தான் மீதம் உள்ளது.

95 சதவீதத்துக்கும் மேலான தொகை தொகுதியின் மேம்பாட்டுக்கு செலவழித்துள்ளேன். பணிகளையும் பட்டியலிட்டுள்ளேன். பழனிசாமி அரசியல் உள்நோக்கத்துடன் உண்மைக்குப் புறம்பான கருத்துகளை தெரிவித்துள்ளார். அவரது பேச்சு எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையி்ல் உள்ளது. எனவே அவர் மீது குற்றவியல் அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேல் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பழனிசாமி ஆஜராகி தனது வழக்கறிஞர் சார்பில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தனக்கு 70 வயதாகிவி்ட்டதால் மூத்த குடிமகன் என்ற முறையிலும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் என்றமுறையிலும் அடுத்த முறை வழக்குவிசாரணைக்கு வரும்போது நேரில்ஆஜராவதில் இருந்து விலக்குஅளிக்க வேண்டும். நீதித்துறையின் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். உடல்நலக்குறைவு காரணமாக மருந்து, மாத்திரைகள் உட்கொண்டு வருகிறேன். இந்த வழக்கை தாமதப்படுத்தும் நோக்கம் எதுவும் எனக்கு இல்லை.

எனவே எனது வயது, நிரந்தர குடியுரிமை, உடல் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் செப்.19-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE