இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் சிறையில் அடைப்பு

By KU BUREAU

ராமேசுவரம்/சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 8 ராமேசுவரம் மீனவர்கள், வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் சூறைக்காற்று வீசியதால் கடந்த ஒரு வாரமாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பியதையடுத்து ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 450 விசைப்படகுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

மரியசியா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடலுக்குச் சென்றகிங்சன் (40), மெக்கன்ஸ் (37), ராஜ் (43),இன்னாசி ராஜா (45), சசி (40), மாரியப்பன் (45), அடிமை (33), முனியராஜ் (23)ஆகியோர் நேற்று அதிகாலை நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படையினர், படகையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர், தலைமன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள், மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபீக், மீனவர்களை வரும் செப்டம்பர் மாதம்5-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்குமாறு உத்தரவிட்டார். தொடர்ந்து, மீனவர்கள் 8 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப் பட்டனர்.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள கடிதத்தில், "நாகை மீனவர்கள் 8 பேரைஇலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தற்போது வரை 116 இந்தியமீனவர்கள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். மேலும், 184 படகுகளும்இலங்கை வசமுள்ளன. மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, அவர்களின் வாழ்வாதாரத்தையும், மீனவர்கள் குடும்பத்தினரையும் பெரிதும் பாதிக்கிறது. எனவே, இலங்கை அரசின் காவலில் உள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்தவதும், அதை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதும் வேதனை தருகிறது. எனவே, இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE