தமிழக-கர்நாடக விவசாயிகள் கலந்துரையாடல்: இரு தரப்பினரும் சகோதர உணர்வுடன் செயல்பட முடிவு

By KU BUREAU

தஞ்சாவூர்: மேகேதாட்டு, ராசிமணலில் அணைகட்டுவது தொடர்பாக தமிழக-கர்நாடக விவசாயிகள் தஞ்சாவூரில் நேற்று மாலை கலந்துரையாடினர்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஏற்பாட்டின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர் குருபூர்சாந்தகுமார் தலைமை வகித்தனர். இதில், கர்நாடக அரசு சார்பில்மேகேதாட்டு அணை கட்டுவதன் அவசியம் குறித்தும், தமிழகத்தில் ராசிமணல் பகுதியில் அணை கட்டுவது குறித்தும் இருமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் பேசினர்.

கர்நாடக விவசாயிகள் சங்கத்தலைவர் குருபூர் சாந்தகுமார் பேசியதாவது: பெங்களூருவில் 1.5 கோடி மக்கள் குடிநீருக்கு காவிரியை நம்பியுள்ளனர். கடந்தஆண்டு போதிய மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. கர்நாடகாவில் உள்ள 38 லட்சம் ஆழ்குழாய்க் கிணறுகளில், 28 லட்சம் கிணறுகளில் போதிய தண்ணீர் இல்லை. மேகேதாட்டு, ராசிமணல் அணைகள் கட்டுவது தொடர்பாக இரு மாநில விவசாய தலைவர்களும், அவரவர் நியாயத்தைப் பேசுகின்றனர். தமிழக விவசாயிகளின் கருத்துகளை நாங்கள் உள்வாங்கியுள்ளோம்.

தஞ்சை பயணத்தை முடித்துக்கொண்டு, கல்லணை, மேட்டூர் அணை, ராசிமணல், மேகேதாட்டு ஆகிய இடங்களைப் பார்வையிட்ட பின்னர், எங்களது மாநில விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்களிடம் ஆலோசிப்போம்.

முதல்வர்களை சந்திப்போம்.. மேலும், இரு மாநில விவசாயிகளும் மைசூரு அல்லது மாண்டியாவில் கலந்துபேசுவோம். அதில்எடுக்கப்படும் முடிவை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கலாம். தொடர்ந்து, இரு மாநில விவசாயிகளும், இரு மாநில முதல்வர்களையும் சந்தித்துப் பேசுவோம். இருமாநில விவசாயிகளும் சகோதரத்துவத்துடன் செயல்பட இந்தக் கூட்டம் வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் பேசும்போது, "மேகேதாட்டுவில் அணை கட்டினால் தமிழகத்துக்கு தண்ணீர் வராது. இதனால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

அதேநேரத்தில், ராசிமணலில் அணை கட்டினால், கர்நாடகா 10 டிஎம்சி நீரை குழாய் மூலம் எடுத்துக்கொள்ளலாம். இரு மாநிலங்களும் மின் உற்பத்தியை மேற்கொள்ளலாம். கடலில் கலந்து தண்ணீர் வீணாவதையும் தடுக்கலாம். இதை கர்நாடக விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார். இந்த கூட்டத்தில் இரு மாநிலங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE