போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கியது

By KU BUREAU

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நேற்று சென்னையில் தொடங்கப்பட்டது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1.08 லட்சம் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றுக்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படுகிறது. அந்த வகையில் 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை, சென்னை குரோம்பேட்டை, மாநகரபோக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அரசு தரப்பில் போக்குவரத்துத் துறை செயலர் க.பணீந்திர ரெட்டி, நிதித்துறைச் செயலர் அருண் சுந்தர் தயாளன், ஒப்பந்த பேச்சுவார்தை குழு கூட்டுநர் ஆல்பி ஜான் வர்கிஸ் உள்ளிட்டோரும், தொமுச, அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 84 தொழிற்சங்கங்கள் சார்பில் அவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இதில் விவாதிக்கப்பட்டவை குறித்துதொழிற்சங்கத்தினர் கூறியதாவது:

சங்கங்களை வரன்முறைப்படுத்த வேண்டும் என்பதை பிரதான கோரிக்கையாக முன்வைத்தோம். பெரும்பான்மையான சங்கங்கள் கையெழுத்திட்டால் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது விதிமுறை. கடந்த முறை 60-க்கும்மேற்பட்ட சங்கங்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற நிலையில், தற்போது சங்கங்களின் எண்ணிக்கை 84-ஆக உயர்ந்துள்ளது. எனவே, மாநில பிரதிநிதித்துவம் பெற்ற சங்கங்களுக்கு பேச கூடுதல் அவகாசம் வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை தொமுசஉள்ளிட்ட சங்கங்கள் வலியுறுத்தின. இடைக்கால நிவாரணம் அறிவிக்க வேண்டும், அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் அண்ணா தொழிற்சங்கம் தலைமையிலான கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்டது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு விரைவில் அழைப்பதோடு, அதில் முதன்மையாக ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வுஉள்ளிட்ட விஷயங்களை பேசிதீர்க்க வேண்டும் என சிஐடியு உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பொதுவான கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த கூட்டங்களில் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஊதிய ஒப்பந்த உடன்படிக்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்தகட்ட பேச்சு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE