“வெயிட் அண்டு ஸீ...” - அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்வர் ஸ்டாலின் சூசகம்

By கி.கணேஷ்

சென்னை: அமெரிக்கா சென்றுவந்த பின் அமைச்சரவை மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின், ‘வெயிட் அண்டு ஸீ’ என சூசகமாக பதிலளித்து விட்டு சென்றார்.

அமெரிக்கா செல்லும் முன் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு முதல்வர் பதிலளித்தார். அமெரிக்கா சென்று வந்த பின், தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? “மாறுதல் ஒன்றுதான் மாறாதது. வெயிட் அண்டு ஸீ” என்றார்.

அமைச்சர் துரைமுருகன் - ரஜினிகாந்த் விவகாரம் குறித்து உங்கள் கருத்து? என்ற கேள்விக்கு, “அவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள். அவரும், இவரும் சொல்லிவிட்டார்கள். அதை நீங்கள் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளணுமே தவிர, நீங்கள் கூறுவதுபோல் பகைச்சுவையாக எடுக்கக்கூடாது,” என்றார்.

இந்த அமெரிக்க பயணத்தில் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? 43 ஆண்டுகள் கழித்து அமெரிக்கா செல்வது மகிழ்ச்சியளிக்கிறதா? என்ற கேள்விக்கு “போற காரியம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை உள்ளது. முதலீட்டாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு என்னை சந்திக்க வேண்டும் என்றும் தமிழகத்துக்கு இதை செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் கொடுத்துள்ள நாட்களே போதாதென்று கருதுகிறேன். அந்த அளவுக்கு போட்டியும், ஆர்வமும் உள்ளது.

இந்தியாவிலேய தமிழகம் தான் தொழில் முதலீட்டில் முன்னணியில் இருப்பதாக இங்கிருப்பவர்கள் கூறவில்லை. வெளிநாட்டில் உள்ளவர்கள் கூறுகின்றனர். நீங்கள் நினைப்பது போல் நடக்கும். முதலீட்டை ஈர்க்க மகிழ்ச்சியுடன் உறுதியுடன் செல்கிறேன்,” என்றார்.

நாணயம் வெளியீட்டுக்குப்பின் மத்திய அரசுடன் இணக்கமான நிலை உள்ளதா? என்ற கேள்விக்கு “இணக்கமான நிலை என்பது உங்கள் எண்ணம். மத்திய அரசின் அனுமதியுடன் வெளியிடப்பட்டது. அந்த மரியாதை அடிப்படையில் அழைத்தோம் வந்தார்கள். வெளியிட்டு சென்றார்கள்,” என்றார்.

ஒட்டுமொத்த தொழில் முதலீடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா? என்ற கேள்விக்கு, “வெள்ளை அறிக்கை வெளியிடுவது மரபு இல்லை. பல மாநிலங்களில் இருந்து முதலீடுகளுக்கு போட்டி இருப்பதால், அதை விரும்ப மாட்டார்கள். முதலீடுகள் முழுமையாக வந்ததும் வெளியிடுவோம்,” என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE