அதிக கட்டணம் விதித்ததோடு இணைப்பை துண்டித்த மின்வாரியத்துக்கு அபராதம் @ சிவகங்கை

By இ.ஜெகநாதன்

சிவகங்கை: தேவகோட்டையில் மின் நுகர்வோருக்கு அதிக கட்டணம் விதித்ததோடு இணைப்பை துண்டித்த மின் வாரியத்துக்கு அபராதம் விதித்து சிவகங்கை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தி.ஊரணி தெற்கு பகுதியைச் சேர்ந்த நத்தர் சாஹிப். இவரது மனைவி ரகமத் காமிலா. இவரது வீட்டுக்கு கடந்த 2023 அக்.3ம் தேதி மின் கட்டணமாக ரூ.29,532 வந்தது. அவர் அதிபட்சமே ரூ.3,000 வரை மின் கட்டணமாக செலுத்திய நிலையில், திடீரென ரூ.29,532 என வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. மேலும் அவரது மின் இணைப்பையும் மின்வாரிய அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.

இதையடுத்து அவர் சிவகங்கை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மின் நுகர்வோர் ரகமத் காமிலாவுக்கு 7 நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்க வேண்டும். மின் இணைப்பு துண்டித்த 2023 நவ.16ம் தேதியில் இருந்து இணைப்பு கொடுக்கும் வரை நாள் ஒன்றுக்கு ரூ.200 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.20,000 வழக்கு செலவாக ரூ.10,000 வழங்க வேண்டும். அவற்றை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் பால சுப்பிரமணியன், உறுப்பினர் குட்வின் சாலமோன்ராஜ் ஆகியோர் உத்தரவிட்டனர். மேலும் 331 யூனிட்க்கு உரிய தொகையை மட்டும் மின் வாரியத்துக்கு ரகமத் காமிலா செலுத்தினால் போதும் என தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE