பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு அறிவுரை

By கி.கணேஷ்

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்வதுடன், அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தியுள்ளார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகள் , வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: "துறையால் மேற்கொள்ளப்படும், பாலப் பணிகள், சாலைகள், ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாயக் கூடம், பள்ளிக் கட்டிடங்கள், பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப் பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மேலும், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மழைநீர் வடிகால், குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை பணிகள் முடிந்ததும், சாலை சீரமைப்புப் பணிகளை உடனே தொடங்கி நிர்ணயித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும். வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்னரே, மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும். மழைநீர் வடிகால் கட்டமைப்பு இல்லாத இடங்களில் உரிய இணைப்பு பணிகளை முடிக்க வேண்டும். நீர்நிலைகள் மற்றும் கால்வாய்கள் முழுமையாக தூர்வாரப்பட்டு மழைநீரை சேகரிக்க தயார் நிலையில் வைக்க வேண்டும்.

வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகளுக்கு ஏதுவாக அலுவலர்களைக் கொண்டு சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும். ஏரிகள் மற்றும் குளங்களுக்கு அருகில் வசிக்கக் கூடிய பொதுமக்களையும், தாழ்வான பகுதிகளில் குடியிருப்பவர்களையும் நிவாரண மையங்களில் பாதுகாப்பாக தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து நிவாரண மையங்களையும் முழுமையாக அனைத்து வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் வைக்க வேண்டும்.

வடகிழக்குப் பருவமழையின் போது பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், ஜெ.சி.பி. வாகனங்கள், கழிவுநீரகற்றும் வாகனங்கள், திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் உள்ளிட்டவற்றை இயங்கும் வகையில் தயார் நிலையில் வைக்க வேண்டும். பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்க வேண்டும். மேலும், பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட வேண்டும். நகர்ப்புற சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், நடமாடும் சுகாதாரக் குழுக்களை அமைத்து மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் விரைவாக சென்று மருத்துவ உதவிகள் அளிக்க வேண்டும். அனைத்து சுகாதார மையங்களிலும் போதிய மருந்துகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும். வடகிழக்குப் பருவமழையின் போது, பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியினை மேற்கொள்ள வேண்டும்" என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் தலைவர் எஸ்.விஜயகுமார், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE